

குவாஹாட்டி: அசாமில் காங்கிரஸுக்கு ஹாட்ரிக் தோல்வி உறுதி என்றும் பாஜக கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அசாம் சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் முடிவுகள் மே 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், கோகாமுக் நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
அசாம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு நான் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் இது. என் முன்னே திரண்டுள்ள இந்த மக்கள் கடல், இளைஞர்களின் உற்சாகம், சகோதரிகள் மற்றும் மகள்களின் ஆசிகள் ஆகியவை இம்முறை ஹாட்ரிக் வெற்றி நிச்சயம் என்பதற்கான அறிகுறி ஆகும்.
அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்கு இங்கு ஹாட்ரிக் தோல்வி கிடைக்கும். காங்கிரஸின் சுயம்புவாக அறிவிக்கப்பட்ட ராஜகுமாரர் (ராகுல் காந்தி) தோல்விகளில் சதம் அடிக்கப் போகிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் சர்வானந்த சோனோவால் மற்றும் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோரின் தலைமையிலான ஆட்சி, அசாமில் சேவை மற்றும் நல்லாட்சியின் புதிய யுகத்தைக் கண்டுள்ளது.
பாஜகவின் தேர்தல் அறிக்கை அசாமுக்கு மேலும் சுபத்தைக்கொண்டு வரும். செவ்வாய்க்கிழமை வெளியான இந்த அறிக்கை ஒரு ‘மங்கலப் பத்திரம்' ஆகும். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது,பழங்குடியின சமூகத்தின் மரபுகளை் பாதுகாப்பது குறித்த முக்கிய அறிவிப்புகள் அதில் வெளியிடப்பட்டுள்ளன. அசாம் தேயிலைக்குப் பெயர் பெற்றது போல, விரைவில் செமிகண்டக்டர் (சிப்) உற்பத்தி மையமாகவும் மாறும். காங்கிரஸ் வெளிநாட்டினரை அசாமில் குடியேற்றி, மண்ணின் மைந்தர்களை சிறுபான்மையினராக மாற்ற விரும்புகிறது. சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிரான பாஜக அரசின் நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.