

குர்மீத் ராம் ரஹீம்
சண்டிகர்: ஹரியானாவின் சிர்சா நகரில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது பெண் சீடர்கள் பாலியல் புகார் அளித்த வழக்கில் 2017-ல் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ‘பூரா சச்’ என்ற உள்ளூர் பத்திரிகையை நடத்திய பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி 2002 அக்டோபரில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 2019-ல் குர்மீத் ராமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஷீல் நகு தலைமையிலான அமர்வு, குர்மீத் ராம் ரஹீம் சிங்கை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக பத்திரிகையாளரின் மகன் தெரிவித்துள்ளார்.