

ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் தான் தாயகம் திரும்ப விரும்பவதாகவும், அதற்காக பிரதமர் மோடியின் உதவியை நாடுவதாகவும் கோரி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், ரஷ்யாவுக்கு கல்வி, வேலை நிமித்தமாகச் செல்லும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாஹில் முகமது ஹுசைன் மஜோத்தி. 23 வயதான இந்த இளைஞர், தங்கள் படைகள் வசம் சரணடையும் வீடியோ ஒன்றை கடந்த அக்டோபர் மாதம் உக்ரைன் படைகள் வெளியிட்டது. ரஷ்யாவுக்காக போர் செய்த அவர் உள்ளிட்ட பலர் அந்த வீடியோவில் இருந்தனர். அப்போதே மஜோத்தி இந்திய ஊடகங்களின் வெளிச்சத்துக்கு வந்துவிட்டார்.
ஆனால், அதன்பின்னர் அவரைப் பற்றி பெரிதாக செய்திகள் ஏதும் வராத நிலையில், தற்போது தான் தாயகம் திரும்ப இந்திய அரசும், பிரதமரும் உதவ வேண்டியுள்ளார்.
உக்ரைன் படைகள் தங்களிடம் சரணடையும் படைவீரர்கள் வாழ்வதற்கு வழி செய்யும் வகையில் அவர்களுக்காக ஒரு அமைப்பை வைத்துள்ளது. அதன் மூலம் அவர்கள், அவர்கள் சார்ந்த நாட்டிடம் உதவி கோரலாம். அதன் அடிப்படையில் தான் மஜோத்தி தற்போது இந்திய அரசின் உதவியை நாடியுள்ளார்.
கடந்த 2024 ஜனவரி 10-ம் தேதி மஜோத்தி, மாணவர் விசாவில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் சென்றார். அங்குள்ள ஐடிஎம்ஓ பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழி மற்றும் கலாச்சாரம் படிப்பதற்காகச் சென்றார். ஆனால், சட்டச் சிக்கலில் சிக்கி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. ரஷ்யப் படையில் இருந்த அவரை உக்ரைன் படைகள் சிறைப்பிடித்தன.
இந்நிலையில், மஜோத்தி தனது குடும்பத்தினருக்கு ஆங்கிலம், இந்தி என இரண்டு மொழிகளில் வீடியோ அனுப்பியுள்ளார். அதில் அவர், “இப்போது நான் உக்ரைனில் போர் குற்றவாளியாக இருக்கிறேன். எனக்கு நம்பிக்கைபோய்விட்டது. என் எதிர்காலம் என்னவாகுமென்று தெரியவில்லை.
ரஷ்யாவுக்கு கல்வி, வேலைக்காக வருபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இங்கே நிறைய மோசடி நபர்கள் உள்ளனர். உங்களை கிரிமினல், போதைப் பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத வழக்குகளில் சிக்கவைப்பர். முடிந்தவரை இதிலிருந்து விலகியிருங்கள்.
நான் போதைப் பொருள் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றேன். அதிலிருந்து வெளிவர ரஷ்ய சிறையில் இருந்தபோது போர் பத்திரத்தில் கையெழுத்திட்டேன். அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. இந்திய அரசு, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என்னை விடுவிக்கக் கோருகிறேன்.” என்று பேசியுள்ளார்.