

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சுவாமி நாராயணனை வழிபடுவதால் சமையலில் பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளாமல் சாப்பிட்டு வந்தார் மனைவி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
அதே நேரத்தில், கணவரும், அவரது தாயாரும் சமையலில் பூண்டு, வெங்காயத்தை அடிக்கடி பயன்படுத்தினர். இது தொடர்பாக, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, இருவருக்குமே தனித்தனியாக உணவு தயாரிக்கப்பட்டது. அப்போதும் பிரச்சினை தீராததால், குழந்தையுடன் கடந்த 2007ம் ஆண்டு மனைவி, தனது தாய் வீட்டுக்குச் சென்றார்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கணவர், விவாகரத்து கோரி அகமதாபாத் குடும்பநல நீதிமன்றத்தில் 2013ம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து விவாகரத்து மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. மேலும், மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கவும் கணவருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் விவாகரத்து வழங்கியது செல்லாது என அறிவிக்கக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சங்கீதா விஷேன், நிஷா தாக்கூர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தனது மத உணர்வை கணவர் புண்படுத்திவிட்டார் என்றும், விவாகரத்து செல்லாது என்றும் அறிவிக்கக் கோரி மனைவி தனது மனுவில் குறிப்பிட்டார்.
அப்போது கணவர் தரப்பில் கூறும்போது, “பூண்டு, வெங்காயம் இல்லாமல் சமைத்த போதும் மனைவி வேண்டுமென்றே பிரச்சினை செய்தார். இது தொடர்பாக மகளிர் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளித்து உள்ளேன்” என்றார்.
விவாகரத்தை அப்போது குடும்ப நல நீதிமன்றத்தில் எதிர்க்கவில்லை என்று தெரிந்ததும், மனைவியின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், நிலுவையில் உள்ள ஜீவனாம்ச தொகையை தவணை முறையில் நீதிமன்றத்தில் செலுத்தும்படி கணவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பூண்டு, வெங்காயம் பிரச்சினையால் 23 ஆண்டு மண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.