

புதுடெல்லி: நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த ஜூலை மாதத்தில் 15.4 சதவீதம் உயர்ந்து ரூ.2,11,205 கோடியை எட்டியுள்ளது. குறிப்பாக, இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) வசூல் 29 சதவீதம் வரை அதிகரித்ததே இந்த வலுவான வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் 2-வது அதிகபட்ச அளவாக ரூ. 2,11,205 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. மேலும், வரி விகிதங்கள் சீரமைக்கப்பட்ட பிறகு எட்டப்பட்ட மிக வேகமான வளர்ச்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பதற்றங்கள் காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களின் சர்வதேச விலைகள் கணிசமாக உயர்ந்தன. கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற இந்த வர்த்தகப் பரிவர்த்தனைகள் மூலம், ஜூலை மாதத்தில் வசூலிக்கப்பட்ட இறக்குமதி மீதான ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி தொகை அதிகரித்துள்ளது.
வரித் திரும்ப அளிப்பு கணக்கீட்டிற்குப் பிறகு, நிகர ஜிஎஸ்டி வசூல் 15.8 சதவீதம் உயர்ந்து ரூ.1,81,237 கோடியாக உள்ளது. கடந்த மாதத்தில் வழங்கப்பட்ட வரித் திரும்ப அளிப்புத் தொகை 13% அதிகரித்து சுமார் ரூ.30,000 கோடியைத் தொட்டுள்ளது.
மாநில அளவிலான வளர்ச்சியில் ஹரியானா 28 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து குஜராத், புதுச்சேரி (26%), கர்நாடகா, கோவா (23%), மகாராஷ்டிரா (20%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
அதேவேளையில், சத்தீஸ்கர் (23% சரிவு), ஜார்க்கண்ட் மற்றும் மணிப்பூர் (20% சரிவு) ஆகிய மாநிலங்கள் வரி வசூலில் பின்னடைவைச் சந்தித்துள்ளன. மத்திய ஜிஎஸ்டி 12.3% உயர்ந்து ரூ.40,000 கோடி மாநில ஜிஎஸ்டி சுமார் ரூ.48,000 கோடியை எட்டியுள்ளது. எனினும், இறக்குமதி ஜிஎஸ்டி உயர்ந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.ட்