

வேலூர்: ‘சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்தால் தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு நாட்களில் ஒரு லட்சம் உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது’ என தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எம்.வெங்கடசுப்பு இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் காரணமான சர்வதேச அளவில் எண்ணெய், இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால், அனைத்து நகரங்களிலும் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்தில் பெரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நகரங்களில் சுத்தமாக சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திவிட்டனர்.
இதே நிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு நாட்களில் ஒரு லட்சம் உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது. சிலிண்டர்கள் இல்லை என்றால் பெரிய உணவகங்கள் மட்டுமின்றி, சாதாரண தேநீர்க் கடை வரை அனைத்தும் பாதிக்கப்படக்கூடும்.
தற்போது உணவகங்களில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் எரிவாயுவை உபயோகப்படுத்திடக் கற்றுக்கொண்டுள்ளனர். அவர்களிடம் விறகு அடுப்புகளைப் பயன்படுத்தும் திறன் இல்லை. உணவகங்களில் விறகு அடுப்புகளைப் பயன்படுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதிப்பதில்லை.
சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்த்தப்பட்டு, எரிவாயு நிறுவனங்கள் அளித்து வந்த தள்ளுபடியும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், ஒரு எரிவாயு சிலிண்டருக்கு சுமார் ரூ.500 வீதம் கூடுதலாகச் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், உணவுப் பொருள்கள் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
தொடரும் பாதிப்புகளைத் தவிர்க்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் உணவகங்களுக்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உணவகங்களையும் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின்கீழ் சேர்த்து, மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள்போல் உணவகங்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு முதற்கட்டமாகப் பலவகை உணவுகள் தயாரிப்பைக் குறைக்கவும், இரண்டாவதாக உணவகங்கள் செயல்படும் நேரத்தைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளோம். இது சிலிண்டர் பயன்பாட்டைக் குறைக்கும். சிலிண்டர் கிடைக்கவே இல்லை என்றால் உணவகங்களை மூடுவதைத்தவிர வேறு வழியில்லை” என்றார்.