

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பின்போது சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்களை கர்நாடக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் ருசித்து சாப்பிட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறை கைதிகளுக்கு ஒரு மாத பேக்கிங் பயிற்சியும், பேக்கரி தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்யும் வாய்ப்பும் அம்மாநில சிறைத்துறையால் வழங்கப்படுகிறது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள் சிறைக்கு வெளியே திறக்கப்பட்டுள்ள பேக்கரி மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறை கைதிகள் தயாரித்த இனிப்பு வகைகள், பிஸ்கெட், பப்ஸ் போன்றவை பெங்களூருவில் நேற்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களுக்கு சிற்றுண்டியாக பரிமாறப்பட்டது.
சிறை கைதிகள் தயாரித்த தின்பண்டங்களை ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா உள்ளிட்ட அமைச்சர்கள், காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் ரசித்து ருசித்தனர். அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற போலீஸாருக்கும், பல்வேறு படைகளை சேர்ந்த வீரர்களுக்கும், பள்ளி மாணவ மாணவியருக்கும் இந்த சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.
இது குறித்து கர்நாடக சிறை மற்றும் சீர்திருத்த சேவைகள் துறை டிஜிபி அலோக் குமார் கூறுகையில், ”சிறை கைதிகள் தயாரித்த உணவு வகைகள் குடியரசு தின நிகழ்வில் பரிமாறப்படுவது நல்லதொரு வாய்ப்பு ஆகும். சிறை கைதிகளின் திறனை மேம்படுத்தி அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்காக இந்த முன்னெடுப்பை மேற்கொண்டோம்.
எங்களது முயற்சிக்கு அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக ஆன்லைன் செயலிகள் மூலம் பொதுமக்களிடமும் இந்த தின்பண்டங்களை கொண்டு சேர்க்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.