

புது டெல்லி: மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் நோக்கில், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 850-ஆக உயர்த்த முற்படும் அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக இண்டியா கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன. தொகுதி மறுவரையறையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இணைத்து மத்திய அரசு தந்திரம் செய்வதாகவும் இண்டியா கூட்டணி தெரிவித்துள்ளது.
அனைத்து எதிர்க்கட்சிகளும் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, "நாங்கள் அனைவரும் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவே உள்ளோம். ஆனால், அரசு இந்த விஷயத்தைக் கையாண்டிருக்கும் விதம் முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.
எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் ஒரே நோக்கத்துடனேயே அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். தொகுதி மறுவரையறையில் அவர்கள் (பாஜக) தந்திரம் செய்கிறார்கள். எனவே, அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை எடுத்து நாடாளுமன்றத்தில் ஒன்றுபட்டுப் போராடும். நாங்கள் இந்த மசோதாவை எதிர்ப்போம், ஆனால் நாங்கள் மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் அல்ல" என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஏப்ரல் 14 அன்று மத்திய அரசு மூன்று மசோதாக்களின் நகல்களை விநியோகித்தது:
அவை: அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா, 2026 மற்றும் யூனியன் பிரதேசச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026 ஆகும். மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில், 2023-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவே ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்ற சிறப்பு அமர்வு கூட்டப்பட்டுள்ளது.
வியாழக்கிழமையன்று கொண்டுவரப்படும் இந்த மூன்று மசோதாக்கள் வாயிலாக, பெண்கள் இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதே தங்கள் நோக்கம் என்று மத்திய அரசு குறிப்பிட்டாலும், இந்த மாற்றங்கள் மக்களவையின் பலத்தை 850-ஆக உயர்த்துவதுடன் மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தின் அரசியல் சமன்பாடுகள், மக்கள் தொகை அடிப்படையில் அமையும் பிரதிநிதித்துவம் மற்றும் மத்திய - மாநில உறவுகள் ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவையாக அமையும்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஜேஎம்எம், ஆர்ஜேடி, சிவசேனா (யுபிடி), என்சிபி (எஸ்பி), ஆம் ஆத்மி கட்சி, ஜேகேஎன்சி, சிபிஐ(எம்), ஐயுஎம்எல், சிபிஐ, ஆர்எஸ்பி, கேரள காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். சமாஜ்வாதி கட்சியும் காணொலி காட்சி மூலம் தனது ஆதரவைத் தெரிவித்தது.