ஜம்மு காஷ்மீரில் பழைய பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் பழைய பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ஜம்மு புறநகர் பகுதியில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில், மூன்று பேர் உயிரிழந்தனர், இருவர் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு புறநகர் பகுதியான 'தூதர்' (Thuther) பகுதியில் இருந்த பழைய பாலம் ஒன்று கடந்த ஆண்டு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சேதமடைந்தது. சேதமடைந்த பாலத்தை சீர் செய்யும் நோக்கில் தடுப்புச் சுவர் மற்றும் அடித்தளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது நேற்று மாலை ​​பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில், நான்கு தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, ராணுவம், தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு துறையினர், உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

இரவு முழுவதும் மின்விளக்குகளின் வெளிச்சத்தில் நடைபெற்ற 12 மணி நேரத் தேடுதல் பணி காரணமாக, முதலில் தர்செம் லால் என்ற தொழிலாளி காயத்துடன் மீட்கப்பட்டார். பின்னர், மூன்று தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மீட்புப் பணியின்போது பாறை விழுந்ததால் தீயணைப்புத் துறை அதிகாரி முகமது ஜாபர் காயமடைந்தார். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு நள்ளிரவு வந்த துணை முதல்வர் சுரேந்தர் குமார் சௌத்ரி, மீட்புப் பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த விபத்து தொடர்பாக உதவிச் செயற்பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், செயற்பொறியாளரை நிர்வாக ரீதியாக வேறு பணிக்கு மாற்றவும் தலைமைப் பொறியாளருக்கு நான் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன். சம்பவம் குறித்து விசாரணை நடத்த அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஐந்து நாட்களுக்குள் விசாரணையை நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்” என தெரிவித்தார்.

துணை முதல்வரின் உத்தரவை அடுத்து, உதவிச் செயற்பொறியாளர் சஹில் வர்மா, இளநிலைப் பொறியாளர் சஜாத் மிர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுப்பணித் துறையின் தொழில்நுட்பச் செயலாளரும் தலைமைப் பொறியாளருமான புருஷோத்தம் குமார் தலைமையில், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒரு விசாரணைக்குழு விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

ஜம்மு காஷ்மீரில் பழைய பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
மேற்கு வங்க மறு வாக்குப்பதிவு: 11 மணிவரை மக்ரஹத் பச்சிமில் 38.2%, டைமண்ட் ஹார்பரில் 35.92 % வாக்குப்பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in