

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 3 இடங்களில் ரூ.1.35 லட்சம் கோடி முதலீட்டில் கூகுள் ஏஐ டேட்டா மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் இணைந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 1.88 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தர்லவாடா பகுதியில் நேற்று கூகுள் ஏஐ டேட்டா மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா விமரிசையாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
ரூ.1.35 லட்சம் கோடி முதலீட்டில் அமைய உள்ள கூகுள் ஏஐ டேட்டா மையம் மூலம் 1.88 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது. ஒரு கிகாவாட்டுக்கு மேல் திறன் கொண்ட இந்த ஏஐ மையம், விசாகப்பட்டினத்தில் 2028-ம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில், தர்லவாடாவில் 266.6 ஏக்கரிலும், பின்னர் அடவிவரம் பகுதியில் 160 ஏக்கரிலும், அனகாபல்லி மாவட்டம் ராம்பில்லி அருகே 174.80 ஏக்கரிலும் இந்த டேட்டா மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையம் கட்டப்படும்போதே சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற சுமார் 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.
கேம் சேஞ்சர்: விசாகப்பட்டினத்துக்குக் கூகுள் ஏஐ டேட்டா மையம் வரவு என்பது ஒரு கேம் சேஞ்சர் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது: விசாகப்பட்டினத்துக்கு மட்டுமல்ல, ஆந்திராவுக்கே இந்த நிகழ்வு ஒரு கேம் சேஞ்சர்தான்.
ஆந்திர வரலாற்றில் இந்த நாள் மறக்க முடியாத நாளாகும். இதனால் நான் மத்திய அரசுக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூகுள் ஏஐ டேட்டா மையம் மூலம் நம் நாட்டின் தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆந்திராவின் பங்கு மிக முக்கியமாக மாற உள்ளது. சர்வதேச டேட்டா நுழைவு வாயிலாக ஆந்திரா இருக்கும். மேலும் பல்வேறு பிரபல நிறுவனங்கள் ஆந்திராவுக்கு வர உள்ளன. இந்த மையம் 2028 நவம்பர் மாத இறுதிக்குள் அமைக்கப்படும். வரும் ஜூலை மாதத்தில் போகாபுரம் விமான நிலையத் திறப்பு விழா நடைபெற உள்ளது. நாங்கள் நிறுவனங்களுடன் வெறும் ஒப்பந்தங்கள் மட்டுமே செய்வதில்லை. அதை முனைப்புடன் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதில் குறியாக உள்ளோம். இதனால்தான் பல நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய முன்வருகின்றன. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
ஏஐ பட்டினம்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: நாடே பெருமிதம் அடையும் விதத்தில் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் சந்திரபாபு நாயுடு. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் ஹைதராபாத்தில் ஒரு சைபராபாத் நகரை உருவாக்கி அதை தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக மாற்றி சாதனை படைத்தவர் சந்திரபாபு நாயுடு.
தற்போது விசாகப்பட்டினம் வருங்காலத்தில் ஏஐ பட்டினமாக மாறும் விதமாக கூகுள் ஏஐ டேட்டா மையத்தை இங்கு கொண்டு வந்துள்ளார். பிரதமர் மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் தொலைநோக்குப் பார்வையுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்பவர்கள். இளைய சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருபவர் அமைச்சர் லோகேஷ். இவருடைய தீவிர முயற்சிகளால் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன.
எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பில் இந்தியா சிறந்து விளங்குகிறது. செமி கண்டக்டர் தயாரிப்பில் நம் நாடு முக்கிய இடம் வகிக்கிறது. ஒரு டாலர் மதிப்புள்ள ‘சிப்’ கிடைக்காவிடில், மில்லியன் டாலர் பொருட்களின் உற்பத்தி நின்று போய் விடும். ரயில்வே துறை மூலம் ஆந்திராவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள ரயில்வே பணிகள் ஆந்திராவில் நடைபெற்று வருகின்றன. ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் ஆந்திராவில் ‘தென் கடலோர ரயில்வே வட்டம்’ தொடங்கப்பட உள்ளது. விரைவில் புல்லட் ரயில்கள் தென் இந்திய மாநிலங்களில் பறக்க உள்ளன.
இதனால், சென்னை, அமராவதி, ஹைதராபாத், பெங்களூரு நகரங்கள் பயனடைய உள்ளன. அமராவதியில் இருந்து ஹைதராபாத்துக்கு வெறும் 70 நிமிடங்களில் சென்றடைந்து விடலாம். இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, மாநில அமைச்சர் லோகேஷ், கூகுள் நிறுவன பிரதிநிதிகள் உட்பட மேலும் பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.