திருமலையில் பக்தர் தவற விட்ட 40 கிராம் தங்கக் காப்பு ஒப்படைப்பு

திருமலையில் பக்தர் தவற விட்ட 40 கிராம் தங்கக் காப்பு ஒப்படைப்பு
Updated on: 
1 min read

திருமலை: திருமலையில் பெண் பக்தர் தவற விட்ட 40 கிராம் எடையுள்ள தங்கக் காப்பை, தேவஸ்தான விஜிலென்ஸ் பெண் ஊழியர் பத்திரமாக கொண்டு வந்து ஒப்படைத்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையானை ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் பக்தரான பாத ராஜ ஸ்ருதி, தனது குடும்பத்தாருடன் வெள்ளிக்கிழமை தரிசித்துள்ளார். பின்னர் அவர், பிரசாத விநியோகம் மையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரின் கையில் இருந்த 40 கிராம் எடையுள்ள தங்கக் காப்பு நழுவி கீழே விழுந்து விட்டது. இதனை அவர் கவனிக்காமல் சென்றுவிட்டார்.

ஆனால், இவரின் பின்னால் வந்த சிலர், ஸ்ருதிக்கு தெரியாமல் அந்த தங்கக் காப்பை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதை கண்காணிப்பு கேமராக்கள் உள்ள மையத்தில் இருந்து விஜிலென்ஸ் அதிகாரிகள் கவனித்து, உடனடியாக வயர்லெஸ் கருவி மூலம் அந்த இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் விஜிலென்ஸ் ஊழியருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர், தங்கக் காப்பை எடுத்துச் சென்றவர்களைப் பின் தொடர்ந்து சென்று, அந்தக் காப்பை பாதுகாப்பாக அவர்களிடமிருந்து மீட்டு, தனது மேலதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அதற்குள் தங்கக் காப்பை தவறவிட்ட ஸ்ருதி இது தொடர்பாக திருமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார். அவரிடம் விசாரணை நடத்தி, அவரின் தங்கக் காப்பு பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

திருமலையில் பக்தர் தவற விட்ட 40 கிராம் தங்கக் காப்பு ஒப்படைப்பு
ஓலா, ஊபர், ஜொமோட்டோ உள்ளிட்ட செயலி மூலம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்கள் தொடங்கினார் ராகுல்

X