

கைது செய்யப்பட்ட கவுரவ் லூத்ரா, சவுரவு லூத்ரா
பனாஜி: தீ விபத்து நடந்த கோவா கேளிக்கை விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் ‘பிர்ச் பை ரோமியோ லேன்' என்ற கேளிக்கை விடுதியில் கடந்த சனிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 25 பேர் உயிரிழந்தனர்.
இந்த விடுதி, சவுரவ் லூத்ரா (40), கவுரவ் லூத்ரா (44) என்ற சகோதரர்களுக்கு சொந்தமானதாகும். இருவரும் விபத்து பற்றி அறிந்த ஒரு மணி நேரத்துக்குள் அதிகாலை 1.17 மணிக்கு தாய்லாந்தின் புக்கெட் நகருக்கு விமான டிக்கெட் எடுத்தனர். கேளிக்கை விடுதியில் சிக்கியவர்களை மீட்க போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் போராடிக்கொண்டிருந்த வேளையில் இண்டிகோ விமானம் மூலம் ஞாயிறு அதிகாலையில் இந்தியாவை விட்டு வெளியேறினர்.
இவர்களுக்கு எதிராக நீல நோட்டீஸ் பிறப்பிக்க சிபிஐ உதவியை கோவா போலீஸார் நாடினர். இதையடுத்து சிபிஐ கோரிக்கையை ஏற்று இன்டர்போல் சார்பில் இருவருக்கும் எதிராக நீல நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் சவுரவ் லூத்ரா, கவுரவ் லூத்ரா ஆகிய இருவரையும் புக்கெட் நகரில் தாய்லாந்து போலீஸார் கைது செய்துள்ளதாக கோவா அதிகாரிகள் நேற்று கூறினர்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறும்போது, “லூத்ரா சகோதரர்களுக்கு எதிராக இன்டர்போல் நீல நோட்டீஸ் பிறப்பித்திருந்த நிலையில், இந்திய அரசின் கோரிக்கையின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன” என்றனர்.
பட்டாசுகளுக்கு தடை ரோமியோ லேன் கேளிக்கை விடுதி வளாகத்துக்குள் எலெக்ட்ரிக் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் இதுவே விடுதி தீப்பற்றியதற்கு காரணமாக அமைந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சுற்றுலா நிறுவனங்களில் பட்டாசுகள், மத்தாப்புக்கள் மற்றும் வெடி பொருட்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்த தடை வடக்கு கோவா முழுவதும் உள்ள கேளிக்கை விடுதிகள், மதுபான விடுதிகள், உணவகங்கள், விருந்தினர் இல்லங்கள், சொகுசு விடுதிகள், கடற்கரை குடில்கள் உள்ளிட்ட சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்கள் அனைத்துக்கும் பொருந்தும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.