

கரூர் துயரத்துக்குப் பின்னர் விஜய் நடத்திய முதல் திறந்தவெளி பொதுக் கூட்டம் புதுச்சேரியில் சமீபத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட, வழக்கம்போல் கூட்டம் திரள, புஸ்ஸி ஆனந்தும் நைஸாக அனுமதிக்க, அதை திறம்பட கட்டுப்படுத்தி, பொதுக் கூட்டத்துக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கினார் எஸ்எஸ்பி இஷா சிங்.
கூட்டம் அதிகரித்தபோது தவெகவினருடன் வாக்குவாதம் நடத்தி, அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஊடக கவனத்தை ஈர்த்துள்ளன. இதனால், இணையத்தில் அவர் வைரலாக, பலரும் யார் இந்த பெண் அதிகாரி என்று கேட்கத் தொடங்கினர்.
யார் இந்த இஷா சிங்? - ஐபிஎஸ் அதிகாரியான இஷா சிங் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் புதுச்சேரி காவல் துறைக்கு வந்தார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் முதலில் புதுச்சேரி கிழக்கு எஸ்பியாக பணியாற்றினார். அதையடுத்து எஸ்எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். இவருக்கு அண்மையில் லஞ்ச ஒழிப்புத் துறை ஒதுக்கப்பட்டது. அங்கு தேங்கியிருந்த முக்கிய வழக்கை துரிதப்படுத்தினார்.
அதாவது கடந்த 2018-19 காலக்கட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சமுதாய நலவழி மையங்களில் தரமற்ற மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்ட வழக்கு விசாரணை நடந்தது.
மருந்து முறைகேடு தொடர்பாக சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர்கள் ராமன், மோகன்குமார், முன்னாள் துணை இயக்குநர் அல்லிராணி, ஏஜென்சி உரிமையாளர்கள் மோகன், புனிதா, நந்தகுமார் ஆகிய 6 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இந்த நடவடிக்கையில் இஷா சிங்கின் பங்கு அதிகமுண்டு.
இஷா சிங்கின் குடும்பம் ஐபிஎஸ் அதிகாரிகள் பின்னணி கொண்டதாகவே உள்ளது. அதாவது அவரது தாத்தா, தந்தை ஆகியோரும் ஐபிஎஸ் அதிகாரிகளாக இருந்தனர். இவரது தந்தை கடந்த 2004-ல் விருப்ப ஓய்வு பெற்று மும்பை உயர் நீதிமன்ற வழக்கறிஞரானார். நேஷனல் ஸ்கூல் ஆப் லாவில் படித்த இஷாவும் அவருடன் வழக்கறிஞராக இருந்துள்ளார்.
வழக்கறிஞராக பணியாற்றிய காலத்தில் விளிம்பு நிலை மக்களுக்காக தனது கல்வியைப் பயன்படுத்தியுள்ளார். உதாரணத்துக்கு மனிதக் கழிவுகளை அப்புறப்படுத்தும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வாதாடி பெற்று தந்துள்ளார்.
தாத்தா, தந்தை வழியில் தானும் ஐபிஎஸ் ஆக விருப்பம் அவருக்கு உருவாகியது. பின்னர் யுபிஎஸ்சி தேர்வெழுதி ஐபிஎஸ் அதிகாரியானார். ஆனால், தற்போது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவில் அதற்காக முயற்சித்து வருகிறார். கூடவே, நீதிபதியாக வேண்டும் என்ற விருப்பமுள்ளதாகக் கூறும் அவர், அந்தத் தேர்வுகளிலும் ஆர்வத்தை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பாராட்டு: இதற்கிடையில், விஜய் பொதுக் கூட்டத்துக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கிய போலீஸ் அதிகாரிகளை புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டி கவுரவித்து சான்றிதழும் தந்துள்ளார்.
கரூர் நிகழ்வின் காரணமாக விஜய்க்கு நடந்த ரோடு ஷோவுக்கு புதுச்சேரி போலீசார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், பொதுக் கூட்டத்திலும் சிறிது குழப்பம் இருந்தாலும் கூட்டம் நன்றாகவே நடந்தது. ஆனால், யாருக்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் செயல்பட்டு கூட்டத்தில் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். அவரது துணிச்சலால், விஜய் கூட்டம் முடிந்த பிறகுதான் புதுச்சேரி போலீசார் இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்தது.