

புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்துக்கு வருகை தந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லிக்கு வருகை தந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அன்புடன் வரவேற்கிறோம்.
விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் ஜிதின் பிரசாதா அவரை வரவேற்றார். பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும், சமச்சீரான, அனைவருக்கும் பிரதிநிதித்துவம் வாய்ந்த உலகை உருவாக்குவதற்கும் ஆக்கபூர்வமான விவாதங்களை நாங்கள் எதிர்நோக்குகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபருடன் இந்தியா வந்த குழுவில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் அரசியல் பணியக நிலைக்குழு உறுப்பினரும், அக்கட்சியின் மத்தியக் குழு பொது அலுவலகத்தின் இயக்குநருமான காய் கி மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று மாலை இரு தரப்பு சந்திப்பை நடத்த உள்ளனர்.
முன்னதாக, பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானையும் பாரத் மண்டபத்தில் வரவேற்றார். மேலும், பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியெய்ரா, எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி, அபுதாபி இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ ஆகியோரையும் வரவேற்றார்.
‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, சவுதி அரேபியா ஆகிய 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தக் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. புதுடெல்லியில் இந்த ஆண்டு நடைபெறும் உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குகிறது.
இந்த மாநாட்டை ஒட்டி டெல்லியில் மத்திய படைகள், டெல்லி காவல் துறையைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்க போர் விமானங்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், ட்ரோன் எதிர்ப்பு சாதனங்கள், ஆகாஷ் ஏவுகணைகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.