

குவாலியர்: மத்திய பிரதேசத்தின் குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்ய சிகார்வர். இவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அடிக்கடி ரீல்ஸ்களை வெளியிடுவது வழக்கம். ஆனால் அவரது ரீல்ஸ்களுக்கு அதிக லைக் கிடைக்கவில்லை. சுமார் 3,000 பேர் மட்டுமே அவரது இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர்ந்தனர்.
புதுமையான ரீல்ஸை வெளியிட திட்டமிட்ட அவர், தனது காதலியை வரவழைத்தார். அந்த பெண், ஆதித்ய சிகார்வரின் வெள்ளை நிற கார் முழுவதும் 3,400 முத்தமழை பொழிந்தார். இதனால் கார் முழுவதும் லிப்ஸ்டிக் முத்த முத்திரைகள் பதிந்தன. இந்த வீடியோவை ஆதித்ய சிகார்வர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். ஒரே நாளில் 55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடியோவை பார்வையிட்டனர். லைக்குகள் குவிந்தன. பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது.
இதன் பிறகு லிப்ஸ்டிக் முத்தக்கறை படிந்த காரை குவாலியர் நகரின் முக்கிய சாலை, தெருக்களில் ஆதித்ய சிகார்வர் ஓட்டித்திரிந்தார். இந்தக் கார் போக்குவரத்து போலீஸாரின் கவனத்தை ஈர்த்தது. மேலும் வைரல் வீடியோ குறித்த தகவலும் அவர்களுக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து குவாலியரின் தாத்திபூர் பகுதியில் சென்ற அந்தக் காரை நேற்று முன்தினம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஆதித்ய சிகார்வருக்கு கண்டிப்பான அறிவுரைகளை வழங்கினார். போலீஸாரின் உத்தரவுப் படி காரில் படிந்திருந்த லிப்ஸ்டிக் கறையை அவர் தண்ணீரை ஊற்றி கழுவினார். மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அவருக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை அவர் செலுத்தினார்.