

புதுடெல்லி: ஜெர்மனி அதிபர் பிரட்ரிக் மெர்ஸ் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜெர்மனி அதிபர் பிரட்ரிக் மெர்ஸ், 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை தந்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
பிரட்ரிக்கின் முதல் இந்திய பயணம் இது. குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் மோடியும் அதிபர் பிரட்ரிக்கும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம், முதலீடு, சிக்கலான தொழில்நுட்பப் பரிமாற்றம், பாதுகாப்புத் துறை போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து தலைவர்கள் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்துகின்றனர்.
குறிப்பாக இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், ஜெர்மனி - இந்தியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு குறித்து தலைவர்கள் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்துகின்றனர். இதன் அடிப்படையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருவரும் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று பார்வையிடுகின்றனர். பின்னர் குஜராத்தில் நடைபெறும் காற்றாடி திருவிழாவை அதிபர் பிரட்ரிக் பார்வையிடுகிறார். அத்துடன் அகமதாபாத்தில் நடைபெறும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அகமதாபாத் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அதிபர் பிரட்ரிக் பெங்களூரு செல்கிறார்.
அதிபர் பிரட்ரிக்கின் இந்த பயணத்துக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனின் முக்கிய தலைவர்கள் டெல்லி வரவுள்ளனர். அப்போது, நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் ஐரோப்பிய யூனியனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் முடிவாகும் என்று தெரிகிறது.
பிரான்ஸ் அதிபர்: அடுத்த மாதம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்தியா வருகிறார். இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாநாட்டில் மேக்ரான் பங்கேற்கிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.