இறங்கி வரும் மத்திய அரசு... பிடிவாதம் காட்டும் சிஜேபி! - எங்கே செல்லும் இந்தப் பாதை?

அக்கறையா, அரசியலா? - வலுக்கும் விவாதம்
இறங்கி வரும் மத்திய அரசு... பிடிவாதம் காட்டும் சிஜேபி! - எங்கே செல்லும் இந்தப் பாதை?
Updated on
4 min read

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி தொடங்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தலைநகர் டெல்லியில் தொடங்கி தற்போது மெல்ல மெல்ல தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவுடன் ஆரம்பித்த இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் தாண்டி இப்போது கோலிவுட், பாலிவுட், மாலிவுட் என்று திரைப் பிரபலங்களும் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

போராட்டத்துக்கான ஆதரவு வளையம் பெரிதாகும் அதே வேளையில், இந்தப் போராட்டத்தின் பின்னணியில் ‘அரசியல்’ இருப்பதாக மத்தியில் ஆளும் பாஜகவும், அதன் ஆதரவுக் கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. சிஜேபி போராட்டம் பின்னணியில் இருப்பது நீட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரம், மாணவர்கள் எதிர்காலம் சார்ந்த அக்கறை மட்டுமா அல்லது காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் ஒருவித ‘பினாமி (ப்ராக்ஸி) அரசியல் போரா?’ என்ற கேள்வி எழுவதாக அவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

சிஜேபி-க்கு இன்ஸ்டா, ட்விட்டர் தளங்களில் அதீத ஆதரவு பெருகியபோதே அதன் ஃபாலோயர்கள் ஆனவர்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா, கீர்த்தி ஆசாத். சிஜேபிக்கு ஆதரவு பெருகிக் கொண்டிருந்தபோதே பக்கவாட்டில் ராகுல் காந்தி சிபிஎஸ்இ ஓஎஸ்எம் குளறுபடிக்கு எதிராக மாணவர்களை நேரில் சந்தித்து வந்தார். அகிலேஷ் யாதவும் அவ்வப்போது நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ ஓஎஸ்எம் முறைக்கு கண்டனம் தெரிவித்துவந்தார்.

இந்த நிலையில், சிஜேபி போராட்டம் வலுப்பெற்ற பின்னர் அதற்கு சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் மூலம் ஆதரவு அளித்தார். ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும், சசி தரூரும் சோனம் வாங்சுக் போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தினர்.

போராட்டத்தின் ஊடே சோனம் வாங்சுக், “ஜூலை 20-ம் தேதி என்னுடன் நாடாளுமன்றம் நோக்கி பேரணிக்கு வாருங்கள். அன்றைய தினம் நமது கோரிக்கையை எம்.பி.க்கள் வசம் ஒப்படைப்போம்” என்று பேசியிருந்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் இந்தப் போராட்டம் எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றம் முடங்கி வருவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

‘பிரதமரின் வாக்குறுதி’

இந்தச் சூழலில், “நமது இளைஞர்களின் நலனும் எதிர்காலமும்தான் எதையும் விட முக்கியமானது. வினாத்தாள்கள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை வழங்கும் வகையில், விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாம் முடிவு செய்துள்ளோம். இது மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான நமது தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். நமது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் தப்பிக்க முடியாது” என்று பிரதமர் மோடி வியாழக்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.

பிரதமரின் அறிவிப்பை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இளைஞர்களின் நலனும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலமும் மோடி அரசின் மிக உயர்ந்த முன்னுரிமையாகவும் உறுதியாகவும் உள்ளது. வினாத்தாள் கசிவு மூலம் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களுக்கு எதிராகப் பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த முக்கிய நடவடிக்கை ஒரு மைல்கல்லாக அமையும்” என்று கூறினார்.

இறங்கி வரும் மத்திய அரசு... பிடிவாதம் காட்டும் சிஜேபி!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் முடக்கப்படும் வேளையில், மத்திய அமைச்சர்களின் சமாதானப் போக்கும் அணிவகுக்கத் தொடங்கியது.

“நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. எனவே, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் முடக்க வேண்டாம்” என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தினார்.

“போராட்டக் குழுவினர் விரும்பும் இடத்தில், விரும்பும் நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் தயாராக உள்ளோம். இதை நாங்கள் தன்மான பிரச்சினையாக கருதவில்லை. இதுவரை 4 முறை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். நானும் அமைச்சர் ஜே.பி.நட்டாவும் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இதன்மூலம் சுமுக தீர்வை எட்ட முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். மத்திய அரசின் அழைப்பை போராட்டக் குழுவினர் ஏற்க வேண்டும்” என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் மாணவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நான்கு முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஆனால், “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி நீக்கம் செய்யப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும். எங்களது கோரிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி செவிசாய்க்க கோருகிறோம். சிஜேபி சார்பில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கிறோம். இதன்படி நாடு முழுவதும் ஒவ்வொரு நகரம், கிராமத்திலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டுகிறோம். இந்த போராட்டம் தேசிய போராட்டமாக மாற வேண்டும்” என்று பிடிவாதம் காட்டியுள்ளது சிஜேபி.

மேலும், ஆரம்பத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் என்ற ஒற்றை கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இப்போது போராட்டக் களத்தில் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. “சர்வதிகார அரசாங்கம் வெளியேறுவது தவிர்க்க முடியாதது. பிரதமரே பதவி விலகுங்கள்” என்ற முழக்கம் சிஜேபி எக்ஸ் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

பொதுநல வழக்கு:

இதற்கிடையில், டெல்லி சிஜேபி போராட்டம் குறித்து விசாரணை கோரும் பொதுநல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. அந்த மனுவில், ‘இது, மாணவர் போராட்டம் என்று அழைக்கப்படுவதற்கு எதிரானது. அவர்கள் டெல்லி முழுவதையும் பிணைக் கைதிகளாக்கிவிட்டனர். சாலைகள் மறிக்கப்பட்டுள்ளன. டெல்லி மக்கள் அவதிப்படுகிறார்கள். பொது ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான நடவடிக்கைகளில் அந்நிய சக்திகள் ஈடுபட்டிருந்தனவா என்பதைத் தீர்மானிக்க, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு விரிவான விசாரணை தேவை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இறங்கி வரும் மத்திய அரசு... பிடிவாதம் காட்டும் சிஜேபி! - எங்கே செல்லும் இந்தப் பாதை?
சிஜேபி போராட்ட ‘பின்புலச் சதி’யை என்ஐஏ விசாரிக்க கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது டெல்லி ஐகோர்ட்

தமிழக பாஜக காட்டம்:

ஒற்றைக் கோரிக்கையில் தொடங்கி சிஜேபி போராட்டக்காரர்கள் பல்வேறு கோரிக்கைகளை அடுக்கும் சூழலில், “தலைமையில் நமது நாடு வல்லரசு நாடுகளின் வரிசையில் தலை நிமிர்ந்து நிற்கின்ற நேரத்தில், நமது நாட்டின் நிலையான பொருளாதார முன்னேற்றத்தை சீர்குலைக்கவும், மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தவும் கரப்பான் பூச்சி ஜனதா இயக்கத்தினர் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என்ற போர்வையில் சூழ்ச்சிகள் செய்து தேச நலனுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்” என்று கூறுகிறார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

ஆனால் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், “அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களிடம் மத்திய அரசு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வினாத்தாள் கசிவு தொடர்பாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் காலம் கடந்து விட்டது. பிரதமரின் சமாளிப்பு நடவடிக்கைகளை மாணவர்கள் ஏற்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார். இதேபோல் சிஜேபியும் பிரதமரின் வாக்குறுது சமாளிப்பு என்று விமர்சித்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், “டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் என்பது மாணவர்களின் தேர்வுக்கான தயாரிப்பு, வினாத்தாள் கசிவு, மறுதேர்வு தொடர்பான விஷயம். அரசு உணர்வுப்பூர்வமாகச் செயல்படாமலோ அல்லது எதிர்வினையாற்றாமலோ இருந்திருந்தால், எதிர்க்கட்சிகள் இத்தகைய கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை புரிந்துகொள்ள முடியும். ஆனால், பிரதமர் மட்டத்திலேயே இதற்கான பதில் அளிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாளை கசியவிட்டது, வாங்கியது, விற்றது என தேர்வின் புனிதத் தன்மையை குலைத்தவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்படும் என்றும், இதற்கென விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு முன்பாகவே, இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுயநல நோக்கங்களுக்காக வினாத்தாள்களை வாங்கி, விற்று, கசியவிட்ட சாதாரண குடிமக்கள் உட்பட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கள் குழந்தைகளின் எதிர்கால தொழிலுக்கு இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது மிக முக்கியம் எனக் கருதி, அதற்காக ஆதரவு அளித்து வரும் பெற்றோர்களுக்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற அறிவிப்பு கவனத்தில் கொள்ளத்தக்கது. நாட்டின் இளம் தலைமுறைக்கு எதிராக இக்கொடிய குற்றத்தைச் செய்தவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றும், இதற்கென விரைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் இன்று அறிவித்துள்ளார்.

பிரதமரின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க் பகுதியில் அனுமதி இன்றி காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியது. அவர்களிடம் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. அந்த கோரிக்கையை அரசு உடனடியாக ஏற்றுக்கொண்டது.

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு இப்போது தயாராக இருக்கும் நிலையில், மேலும் பல நிபந்தனைகளை விதித்து அவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கின்றனர். நீட் விவகாரத்தையும் இளம் மாணவர்களையும் பயன்படுத்திக்கொண்டு, காங்கிரஸ் கட்சி தனது வழக்கமான பாணியில் நாடாளுமன்றத்தை முடக்குகிறது. விவாதம் நடந்தால், நாட்டின் இளைஞர்கள் தொடர்பான ஓர் உணர்வுப்பூர்வமான விவகாரத்தை அரசியலாக்குவது அவர்கள்தான் என்ற உண்மை தெரிந்துவிடும் என்பதால் அவர்கள் விவாதத்தை தவிர்க்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்த எந்தக் காரணமும் இல்லை. அவர்கள் நியாயமான விவாதத்தை விரும்புவதில்லை.

இப்போதும்கூட எதிர்க்கட்சிகளிடம், குறிப்பாக காங்கிரஸ் கட்சியிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். விரிவான விவாதத்தில் ஈடுபடுங்கள். பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதியுங்கள். பதில் அளிக்கத் தயாராக இருக்கும் அமைச்சர்களுக்கு எதிராக கூச்சலிட்டு பேசவிடாமல் தடுப்பதில் எந்தப் பயனும் இல்லை. அவையின் தலைவர் பேச தயாராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்பது இடையூறு செய்வது மட்டுமே; அவர்களுக்குத் தீர்வுகள் தேவையில்லை” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

எங்கே செல்லும் இந்தப் பாதை...

அன்னா ஹசாரேவின் போராட்டத்தால் ஆம் ஆத்மி விளைந்தது. டெல்லி விவசாயிகள் போராட்டத்தால் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது. இன்னும் பல பிரம்மாண்டப் போராட்டங்கள் அதன் நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்ட வரலாறு உண்டு. சில போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதும், தானாகவே வலுவிழந்த வரலாறும் உண்டு. அந்த வரிசையில் சிஜேபியின் போராட்டம் எதை நோக்கிச் செல்லும், எந்த இலக்கை அடையும், எதை உருவாக்கும் என்றெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in