“ஜென் இசட், ஆல்பா தலைமுறை நாட்டை வழிநடத்தும்” - பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

“ஜென் இசட், ஆல்பா தலைமுறை நாட்டை வழிநடத்தும்” - பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
Updated on
2 min read

புதுடெல்லி: பல்​வேறு துறை​களில் சாதனை படைத்த 20 சிறாருக்கு குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று தேசிய சிறார் விருது வழங்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து டெல்லி பாரத் மண்​டபத்​தில் நடை​பெற்ற விழா​வில் 20 சிறார்​களையும் சந்தித்து பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

சீக்​கிய குரு கோவிந்த் சிங்​கின் இளைய மகன்​கள் பாபா சோரா​வார் சிங் (9), பாபா பதே சிங் (6) ஆகியோர் முகலாய படை வீரர்​களால் கடத்​தப்​பட்​டனர். இரு குழந்​தைகளை​யும் மதம் மாறச் சொல்லி முகலாய ஆட்​சி​யாளர்​கள் நிர்​பந்​தம் செய்​தனர். வீரம்மிக்க இரு சிறு​வர்​களும் மதம் மாற மறுத்​து​விட்​டனர். கடந்த 1704-ம் ஆண்டு டிசம்​பர் 26-ம் தேதி இரு சிறு​வர்​களும் உயிரோடு புதைக்​கப்​பட்​டனர். அவர்​களின் வீர மரணத்​தின் நினை​வாக ஆண்​டு​தோறும் டிசம்​பர் 26-ம் தேதி வீர பால​கர் தினம் கொண்​டாடப்​படு​கிறது. இந்த நாளில் பல்​வேறு துறை​களில் சாதனை படைத்த 20 பேருக்கு தேசிய சிறார் விருது வழங்​கப்​பட்டு உள்​ளது.

நமது நாடு பல்​வேறு துறை​களில் சாதனை படைத்து வரு​கிறது. டிஜிட்​டல் இந்​தியா திட்​டம் மிகப்​பெரிய வெற்றி பெற்​றிருக்​கிறது. இளைஞர்​களின் நலனில் மத்​திய அரசு அதிக அக்​கறை செலுத்தி வரு​கிறது. அவர்​களுக்கு திறன்​சார் பயிற்​சிகள் வழங்​கப்​பட்டு வரு​கிறது. விண்​வெளி, நிதிச்சேவை தொழில்நுட்பம், உற்​பத்தி துறை உட்பட அனைத்து துறை​களி​லும் இளைஞர்​களுக்கு புதிய வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இந்​தி​யா​வின் ஜென் இசட், ஜென் ஆல்பா தலை​முறை​யினர் மிகுந்த அறி​வாளி​கள். அவர்​களின் திறமை, தன்​னம்​பிக்​கை, தலைமைப் பண்பு வியப்​பளிக்​கிறது. அடல் டிங்​கரின் ஆய்​வகங்​கள் மூலம் மாணவ, மாண​வியர் ஆராய்ச்​சி​யில் அதி​கம் ஈடுபட ஊக்​கம் அளிக்​கப்​படு​கிறது. தேசிய கல்விக் கொள்​கை​யில் தாய்​மொழிக் கல்விக்கு முன்​னுரிமை அளிக்​கப்​படு​கிறது. இதன்​மூலம் மாணவ, மாண​வியரின் கற்​றல் திறன் அதி​கரிக்​கிறது.

இந்​தி​யா​வின் எதிர்​காலம் இளம் தலை​முறை​யினர் கையில் உள்​ளது. வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யித்து உள்​ளோம். இந்த லட்​சி​யத்தை நோக்கி ஜென் இசட் (1997 முதல் 2012-க்​குள் பிறந்​தவர்​கள்), ஜென் ஆல்பா (2010 முதல் 2024-க்​குள் பிறந்​தவர்​கள்) தலை​முறை​யினர் நமது நாட்டை வழிநடத்​து​வார்​கள்​. இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசி​னார்​.

சந்தாலி மொழியில் அரசியலமைப்பு சட்டம்: டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் அரசியலமைப்பு சட்டத்தை சந்தாலி மொழியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டார்.

இந்நிலையில், ‘எக்ஸ்' தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘‘சந்தாலி மொழியில் உள்ள அரசியலமைப்புச் சட்டம், அரசியலமைப்பு குறித்த விழிப்புணர்வையும் ஜனநாயகப் பங்கேற்பையும் ஆழப்படுத்த உதவும். இது பாராட்டத்தக்க முயற்சி! சந்தாலி கலாச்சாரம் குறித்தும் நாட்டின் முன்னேற்றத்துக்கு சந்தாலி மக்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றியும் இந்த நாடு மிகுந்த பெருமை கொள்கிறது” என்று கூறியுள்ளார்.

2003-ம் ஆண்டின் 92-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் சந்தாலி மொழி சேர்க்கப்பட்டது. ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களில் கணிசமான பழங்குடி மக்களால் இம்மொழி பேசப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் தமிழில் அதிக உரைகள்: பிரதமர் மோடி பேசியதாவது: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1835-ம் ஆண்டில் மெக்காலே கல்வி திட்டம் அமல் செய்யப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் இந்த கல்வி திட்டம் மாற்றப்படவில்லை. தற்போது புதிய இந்தியா உருவாகி உள்ளது.

நாம் காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து முழுமையாக விடுபட்டு விட்டோம் என்பது நாடாளுமன்றத்தில் தெளிவாக உணர்த்தப்பட்டது. அண்மையில் நடந்த குளிர்கால கூட்டத் தொடரில் இந்தி, ஆங்கிலத்தை தவிர்த்து இந்திய மொழி களில் 160 உரைகள் நிகழ்த்தப்பட்டன.

இதில் அதிகபட்சமாக தமிழில் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டன. மராத்தியில் 40, வங்கமொழியில் 25 உரைகள் நிகழ்த்தப்பட்டன. இந்தியாவின் மொழிகளை அழிக்க மெக்காலே முயற்சி செய்தார். அதில் இருந்து இந்தியா விடுபட்டு நாட்டின் அனைத்து மொழிகளையும் பாதுகாத்து வருகிறோம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

“ஜென் இசட், ஆல்பா தலைமுறை நாட்டை வழிநடத்தும்” - பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
வங்கதேச வன்முறையில் கபட நாடகம்: சினிமா பிரபலங்கள் ஜான்வி கபூர், காஜல் அகர்வால் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in