“நம் ஜென்ஸீ தலைமுறையினர் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகிறார்கள்” - பிரதமர் மோடி பெருமிதம்

“நம் ஜென்ஸீ தலைமுறையினர் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகிறார்கள்” - பிரதமர் மோடி பெருமிதம்
Updated on
1 min read

புதுடெல்லி: “நம் ஜென்ஸீ பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள், கோடிங் பணிகளை மேற்கொள்பவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில், இந்திய விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்கைரூட்டின் இன்ஃபினிடி வளாகத்தை வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மேலும், ஸ்கைரூட்டின் முதல் சுற்றுப்பாதை ராக்கெட்டான விக்ரம்-1 ஐ அவர் அறிமுகப்படுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்திய இளைஞர்கள் நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அவர்கள் எந்த ஒரு வாய்ப்பையும் புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறார்கள்.

அரசாங்கம் விண்வெளித் துறையை தனியாருக்கு திறந்தபோது நாட்டின் இளைஞர்கள், குறிப்பாக ஜென்ஸீ இளைஞர்கள் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முன்வந்தனர். தற்போது 300-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவின் விண்வெளி எதிர்காலத்துக்கு புதிய நம்பிக்கையைத் தருகின்றன.

இன்று ஜென்ஸீ பொறியளார்கள், வடிவமைப்பாளர்கள், கோடிங் பணிகளை மேற்கொள்பவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறார்கள். ராக்கெட் நிலைகள், செயற்கைக்கோள் தளங்கள் என ஒவ்வொன்றிலும் அவர்கள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாத துறைகளில் இன்று இந்திய இளைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தியாவின் தனியார் விண்வெளி திறமை உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாறி வருகிறது.

இன்று விண்வெளித் துறையில் நாடு முன் எப்போதும் இல்லாத வாய்ப்புகளைக் காண்கிறது. ஸ்கைரூட்டின் இன்ஃபினிடி வளாகம், புதிய சிந்தனை, புதுமை மற்றும் இளைஞர் சக்தியின் பிரதிபலிப்பாகும்.

நமது இளைஞர்களின் புதுமை, திறன், தொழில்முனைவு ஆகியவை புதிய உயரங்களைத் தொடுகின்றன. இன்றைய நிகழ்வு எதிர்காலத்தில், உலக அளவில் செயற்கைக்கோள்களை ஏவுவதில் இந்தியா தலைவராக உருவெடுக்கும் என்பதைக் காட்டுகிறது.

இந்தியாவின் விண்வெளிப் பயணம் வரையறுக்கப்பட்ட வளங்களுடன் தொடங்கியது. ஆனால், நமது லட்சியங்கள் ஒருபோதும் மட்டுப்படுத்தப்படவில்லை. ராக்கெட்டின் ஒரு பகுதியை சைக்களில் எடுத்துச் சென்றதில் இருந்து உலகின் மிகவும் நம்பகமான ஏவுகணை வாகனம் வரை மிகப் பெரிய உயரங்களை இந்தியா அடைந்துள்ளது.

நம்பகத்தன்மை, திறன், மதிப்பு ஆகியவற்றுடன் இந்தியா தனது சொந்த அடையாளத்தை உருவாக்கி உள்ளது. இந்திய விண்வெளிப் பயணத்துக்கு இஸ்ரோ பல பத்தாண்டுகளாக ஒரு புதிய பாதையை உருவாக்கிக்கொடுத்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

“நம் ஜென்ஸீ தலைமுறையினர் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகிறார்கள்” - பிரதமர் மோடி பெருமிதம்
"தலைமை அழைத்தால் டெல்லி செல்வேன்" - முதல்வர் மாற்றம் பற்றி சித்தராமையா தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in