

புதுடெல்லி: மேற்கு ஆசிய போரால் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயோ காஸ் மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்களில் இந்திய ராணுவம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: சமையலுக்கு தேவையான மாற்று எரிசக்தி ஆதாரங்களை நோக்கி ராணுவம் விரைவாக நகர்ந்து வருகிறது. பயோ காஸ் அடுப்புகளை கொள்முதல் செய்வதற்கான உத்தரவுகள் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளன.
ராணுவம் முழுவதிலும் தினமும் சுமார் 1,56,000 கிலோ சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இதில் சுமார் 20%, அதாவது நாளொன்றுக்கு சுமார் 30,000 கிலோ சமையல் எரிவாயுவை பயோ காஸ் மூலம் மட்டுமே சேமிக்க முடியும்.
தற்போது ஒவ்வொரு வீரருக்கும் சமையலுக்காக நாள் ஒன்றுக்கு 125- 135 கிராம் எரிவாயு ஒதுக்கப்படுகிறது. இது தவிர, நிர்வாக, செயல்பாடு மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காக 2 லட்சத்துக்கும் அதிகமான பல்வேறு வகை வாகனங்களை ராணுவம் இயக்குகிறது. இதனால் தினமும் பெருமளவு எரிபொருள் நுகர்வு ஏற்படுகிறது.
இந்த சுமையைக் குறைக்க, நிர்வாக ரீதியான ராணுவப் படைகளின் பயணத்தை 400 கி.மீ தூரமாக கட்டுப்படுத்தலாமா என்றும், அதற்கு மேற்பட்ட தூரத்துக்கு ரயில் போக்குவரத்தை அதிகபட்சமாக பயன்படுத்தலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
வாகனங்களைப் பகிர்ந்துகொள்வது, உணவுப் பொருட்கள் சேகரிப்பு மற்றும் படை வீரர்களை ஏற்றிச் செல்லுதல் போன்ற பணிகளை ஒருங்கிணைப்பதும் பரிசீலனையில் உள்ளது. சாத்தியமான இடங்களில் சிஎன்ஜி அல்லது வாடகை மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும். இவ்வாறு ராணுவ அதிகாரிகள் கூறினர்.
சூரிய மற்றும் பயோ காஸ் ஆலைகளுக்காக சுமார் 46,000 ஏக்கர் பாதுகாப்புத் துறை நிலத்தைப் பயன்படுத்த ஆயுதப் படைகள் திட்டமிட்டுள்ளதாக கடந்த ஆண்டு டிசம்பரில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.