

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் போலீஸ் போல நடித்து நகை வியா பாரியை கடத்திச் சென்று ரூ.1.3 கோடி பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில் 10 பேர் அடங்கிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து செகந்திராபாத் மண்டல துணை ஆணையர் ரக்சிதா கிருஷ்ணா மூர்த்தி கூறியதாவது: கடந்த 5-ம் தேதி ஹைதராபாத் ராமந்தாபூர் பகுதியில் தனது நகைக் கடைக்குச் சென்று கொண்டிருந்த ஸ்ரீனிவாச ராவ் (53) என்ற நகை வியாபாரியை, போலீஸ் போல வேடமிட்டு வந்த மர்ம கும்பல் வழிமறித்து கடத்தி உள்ளது.
இந்தக் கும்பல் நகை வியாபாரியை ரகசிய இடத்தில் அடைத்து வைத்து ரூ.15 கோடி கேட்டு மிரட்டியதோடு அவரிடமிருந்த ரூ.1.3 கோடியையும் பறித்துள்ளது.
போலீஸாரின் சோதனைகளில் சிக்காமல் இருக்க, இந்தக் கும்பல் போலி வாகன எண்களைப் பயன்படுத்தியதோடு, தப்பிச் செல்லும் வழியில் கார்களையும் மாற்றிப் பயணித்துள்ளது. எங்களது தனிப்படையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு 10 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.
போடூப்பல், ஹேமநகரில் உள்ள ஒரு மனைப் பிரிவு தொடர்பான தகராறே இந்த குற்றத்துக்கு முக்கியக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
முக்கியக் குற்றவாளியான துமாவத் காந்த், குஞ்சாபோகு சுரேஷ் (என்கிற சூர்யா / சூரி) மற்றும் னிவாஸ் ரெட்டி ஆகியோருடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதமே இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கைதான கும்பலிடமிருந்து ரூ.1.07 கோடி ரொக்கம், 118.26 கிராம் தங்கம், 5 வாகனங்கள் மற்றும் 9 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.