புதுடெல்லி: சீனாவின் யூனிட்ரீ ரோபோடாக் (robodog) ஒன்றை தங்கள் தயாரிப்பு என்று கூறியதற்காக டெல்லி ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் இருந்து வெளியேற கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்துக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 16-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த உச்சி மாநாடு வரும் 20-ம் தேதி நிறைவடைகிறது.
உலகளாவிய தெற்கில் நடத்தப்படும் முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடாக இது அறியப்படுகிறது. இந்த உச்சி மாநாட்டில் 110-க்கும் மேற்பட்ட நாடுகள், 30 சர்வதேச நிறுவனங்கள், 45 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள இந்த உச்சி மாநாட்டில், உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் தனது ஸ்டாலை அமைத்துள்ளது. இந்த ஸ்டாலில், இயந்திர நாய் (ரோபோடாக்) ஒன்றின் செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ரோபோவை தங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியதாக அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. எனினும், இது சீனாவின் யூனிட்ரீ நிறுவனத்தின் ரோபோ என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
தவறான தகவல்களை அளித்ததற்காக ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் இருந்து வெளியேற கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்துக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையடுத்து, பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியர் நேஹா சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உத்தரவு எதுவும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. கல்கோடியாஸ் நிறுவனம் மிகவும் பொறுப்பான நிறுவனம்.
இந்த இயந்திர நாயை (ரோபோ) நாங்கள் உருவாக்கவில்லை. உருவாக்கியதாகவும் நாங்கள் கூறவில்லை. இதுபோன்ற தொழில்நுட்பங்களை வடிவமைத்து உற்பத்தி செய்யும் மனங்களைத்தான் நாங்கள் உருவாக்கி வருகிறோம். இதற்காக, நவீன தொழில்நுட்பங்களை அணுக மாணவர்களுக்கு நாங்கள் வசதிகளை ஏற்படுத்தித் தருகிறோம். இதனால், அவர்கள் நடைமுறை அனுபவத்தைப் பெறுகிறார்கள். மேலும், எதிர்காலத்துக்கு தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள்.
எங்கள் பல்கலைக்கழகத்துக்கு எதிராக எதிர்மறையான கருத்துகளைப் பரப்புவது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதுமைகளை உருவாக்கவும், கற்றுக்கொள்ளவும், தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் கடினமாக உழைக்கும் மாணவர்களின் மன உறுதியைப் பாதிக்கும்’’ என தெரிவித்துள்ளார்.
சீனாவின் யூனிட்ரீ என்ற நிறுவனம், இத்தகைய ரோபோக்களை குறைந்த விலையில் அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. பாஸ்டன் டைனமிக்ஸ் ஸ்பாட் போன்ற பல போட்டியாளர்களைவிட இத்தகைய இயந்திர நாய்கள் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன. தொழில்துறை பணிகளுக்கும், பொழுதுபோக்குப் பயன்பாடுகளுக்கும் இத்தகைய ரோபோக்கள் அதிகம் பயன்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.