“போர்களை ஏஐ உதவியோடு நடத்தலாம்; திறமையான ராணுவத்தால் மட்டுமே வெற்றி கிட்டும்” - ராஜ்நாத் சிங்

“போர்களை ஏஐ உதவியோடு நடத்தலாம்; திறமையான ராணுவத்தால் மட்டுமே வெற்றி கிட்டும்” - ராஜ்நாத் சிங்
Updated on
2 min read

விசாகப்பட்டினம்: “எதிர்காலப் போர்கள் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு நடத்தப்படலாம். ஆனால், அவை நாட்டின் மனவுறுதி, பயிற்சி பெற்ற வீரர்கள், ராணுவ சக்தி ஆகியவற்றாலேயே வெல்லப்படும்” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலை கிழக்கு கடற்படையுடன் இணைக்கும் விழாவில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், இந்த நிகழ்ச்சி, “இந்தியாவின் கடல்சார் சக்தியையும் உள்நாட்டு பாதுகாப்புத் திறனையும் வலுப்படுத்துவதில் மற்றொரு மைல்கல். சுமார் ஒன்றரை ஆண்டுகளில் ஆறு முன்னணி போர்க்கப்பல்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. இது நாட்டின் விரிவடைந்து வரும் கப்பல் கட்டும் திறன், வேகமாக வளர்ந்து வரும் பாதுகாப்புத் தொழில் சூழல், உள்நாட்டு உற்பத்தியில் அதிகரித்து வரும் நம்பிக்கை ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.

நாட்டின் பாதுகாப்பு, இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையில் இருந்து, தனது சொந்த மக்களின் திறன்கள் மற்றும் புதுமைகளின் மூலம் மேம்பட்ட ராணுவ தளங்களை உற்பத்தி செய்யும் நிலைக்கு இந்தியா முன்னேறியுள்ளது. ஐஎன்எஸ் மகேந்திரகிரியின் 75%க்கும் அதிகமான பாகங்கள் உள்நாட்டு பொருட்களைக் கொண்டே கட்டப்பட்டுள்ளன.

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள், மேம்பட்ட பல்நோக்கு ரேடார், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்புகள், மின்னணு போர் அமைப்புகள், நவீன உள்நாட்டு ஆயுத தளவாடங்கள் ஆகியவற்றைக்கொண்ட மிகவும் திறன் வாய்ந்த ஓர் ஆழ்கடல் தளமாக இந்த போர்க்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வான், கடல் மேற்பரப்பு, கடலுக்கு அடியில் என மூன்று வழிகளில் ஏற்படும் அச்சுறுத்தல்களையும் சமாளிக்கும் திறன் இந்த போர்க்கப்பலுக்கு உள்ளது. இது இந்திய பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் நாட்டின் கடல்சார் பாதுகாப்பை கணிசமாக வலுப்படுத்தும்.

எதிர்காலப் போர்கள் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு நடத்தப்படலாம். ஆனால், அவை தேசத்தின் மனவுறுதி, பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள், திறமையான ராணுவ சக்தி ஆகியற்றால்தான் வெல்லப்படும். எனவே, தொழில்நுட்பங்களும் வழக்கமான தளங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. மாறாக, அவை ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன. ஒன்றை ஒன்று முழுமையாக்குகின்றன. வழக்கமான தளங்கள் இல்லாமல், புதிய தொழில்நுட்பங்கள் முழுமை பெறாது.

இன்றைய உலகில் கடல்சார் பாதுகாப்பும் பொருளாதார பாதுகாப்பும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. இயற்கை பேரிடர்கள், மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணப் பணிகள், கடற்கொள்ளை எதிர்ப்புப் பணிகள், மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் இந்திய கடற்படை தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. சமீபத்திய மேற்காசிய மோதலின்போது எரிசக்தி சரக்குகளை ஏற்றிச்செல்லும் வர்த்தக கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்வதிலும் கடற்படை பங்கு வகித்துள்ளது.

இந்தியாவின் கடல்சார் சக்தியின் மிக வலிமையான தூண்களில் ஒன்றாக விசாகப்பட்டினம் உள்ளது. ஆந்திரப் பிரதேசம் பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்திக்கான ஒரு முக்கிய மையமாக வளர்ந்து வருகிறது. கடல்சார் இந்தியா 2030 தொலைநோக்குப் பார்வையின் கீழ் அரசாங்கம், கப்பல் கட்டும் திறனை விரிவுபடுத்தி வருகிறது. கடல்சார் துறையை நவீனமயமாக்கி வருகிறது. ஒவ்வொரு உள்நாட்டு போர்க்கப்பலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தொழில்நுட்ப புத்தாக்கத்தை ஊக்குவித்து, தற்சார்பு இந்தியா இலக்கை முன்னெடுத்துச் செல்கின்றன. அதோடு, நாட்டின் தொழில்நுட்பத் திறன், தொழில்துறைச் சூழல், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றையும் வலுப்படுத்துகின்றன.

அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதிலும், வலிமையான தன்னிறைவு பெற்ற, உலக அளவில் போட்டியிடக்கூடிய இந்தியாவை உருவாக்குவதிலும் நாட்டின் இளைஞர்கள் பங்களிக்க வேண்டும். புத்தொழில் நிறுவனங்கள், புதுமையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறையினரும் ஆகியோருக்கும் இதில் முக்கிய பங்கு இருக்கிறது.” என தெரிவித்தார்.

“போர்களை ஏஐ உதவியோடு நடத்தலாம்; திறமையான ராணுவத்தால் மட்டுமே வெற்றி கிட்டும்” - ராஜ்நாத் சிங்
இந்தியா - நியூசிலாந்து வர்த்தகத்தை 2030-க்குள் ரூ.35,000 கோடியாக உயர்த்த இலக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in