

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் பரத்பூர் தொகுதி எம்எல்ஏ ஹுமாயூன் கபீர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் தனது மாவட்டத்தில், அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி போன்று புதிய மசூதி கட்டும் முயற்சியில் இறங்கினார். இதனால் இவர் திரிணமூல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மசூதி கட்டுவதற்காக ஹுமாயூன் கபீர் ஓர் அறக்கட்டளை தொடங்கியுள்ளார். இதன் வங்கிக் கணக்கில் பல்வேறு பகுதிகளில் இருந்து நிதி டெபாசிட் செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்த தொகை பிறகு வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுவதாக மேற்கு வங்க சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறக்கட்டளையின் பொருளாளர் அமீன்ல் ஷேக் கூறும்போது, ‘‘மசூதி நிதிக்காக நாங்கள் வெளியிட்டுள்ள க்யூஆர் கோடு மர்ம நபர்களால் நகல் எடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளது. இந்த போலி குறியீட்டின் உதவியால் பணம் வசூலிக்கப்படுகிறது’’ என்றார்.
இதற்கிடையே பாபர் பெயரில் மசூதி கட்டுவதால், தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக ஹுமாயூன் கபீர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் தனக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசு, மத்திய அரசு மற்றும் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் நீதிமன்றம் மூலமாக மத்திய படைகளின் பாதுகாப்பை கோரப் போவதாக அவர் கூறியுள்ளார்.
முஸ்லிம்களுக்காக டிசம்பர் 22-ல் தனிக் கட்சி தொடங்கவிருப்பதாகவும் ஹுமாயூன் கபீர் அறிவித்துள்ளார்.
‘‘எதிர்வரும் மேற்கு வங்க தேர்தலில் முஸ்லிம் வாக்குகளால் எனது கட்சி 90 தொகுதிகளில் வெற்றி பெறும். மீதமுள்ள 204 தொகுதிகளில் திரிணமூல், காங்கிரஸ், பாஜக என யார் வென்றாலும் எங்கள் ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.