

புதுடெல்லி: மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கரோல், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாட்டில் உள்ள 30.05 கோடி வாகனங்களில் சுமார் 16.5 கோடி வாகனங்களுக்கு காப்பீடு இல்லை என்றும், இதனால் விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் இழப்பீடு கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
முன்னதாக, புதிய கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் என 2018-ல் உச்ச நீதிமன்ற உத்தரவி்ட்டது. 8 ஆண்டுகள் கடந்தும் ஏராளமான வாகனங்கள் காப்பீடு இன்றியே இயங்கி வருவதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இச்சூழலைச் சீரமைக்க, காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்காத வகையிலான மாதிரித் திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகமும், ‘ஐஆர்டிஏஐ’ அமைப்பும் இணைந்து உடனடியாகச் செயல்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன்படி, காப்பீட்டைப் புதுப்பிக்கும் வரை பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வழங்கப்படாது. இது அனைத்து வாகனங்களுக்கும் காப்பீட்டைக் கட்டாயமாக்கும் மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 146-ஐ உறுதி செய்யும்.
மேலும், புதிய கார்களுக்கான காப்பீட்டை 3-லிருந்து 4 ஆண்டுகளுக்கும், இருசக்கர வாகனங்களுக்கு 5-லிருந்து 6 ஆண்டுகளுக்கும் நீட்டிக்க ‘ஐஆர்டிஏஐ’ அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.