‘இ-சஞ்சீவினி’ முதல் சென்னை பயணம் வரை - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் பகிர்வு

‘இ-சஞ்சீவினி’ முதல் சென்னை பயணம் வரை - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் பகிர்வு
Updated on: 
3 min read

புதுடெல்லி: ‘இ-சஞ்ஜீவினி’ முதல் சென்னை பயணம் வரையில் கிடைத்த அனுபவங்கள் குறித்து ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

ஒவ்வொரு மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை அன்று ‘மன​தின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களு​டன் பிரதமர் மோடி பேசி வரு​கி​றார். இதன்​படி 139-வது மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்​பானது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள்:

நமது நாட்டு மக்களிடம் ஒரு சிறப்பம்சம் உண்டு. எந்தவொரு தொழில்நுட்பத்தையும் இயல்பான முறையிலே அன்றாட வாழ்வின் அங்கமாக்கிக் கொள்வோம். ‘இ-சஞ்ஜீவினி’ திட்டம் இதற்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு. மக்களுடைய வாழ்க்கையை சுலபமாக்குவதில் தொழில்நுட்பத்தை எத்தனை சிறப்பாகக் கையாள முடியும் என்பது இதனால் விளங்குகிறது.

இதன் வாயிலாக இதுவரை சுமார் 50 கோடி தொலைபேசிவழி ஆலோசனைகள் செய்யப்பட்டுவிட்டன. இந்தப் புள்ளிவிவரம் மிகவும் பெரியது. தொழில்நுட்பத்தின் பலம், நமது மருத்துவர்களின் சேவையுணர்வு, நாட்டு மக்களின் நம்பிக்கை ஆகியவற்றுக்கான ஆகச்சிறந்த உதாரணங்கள்.

இன்று இ-சஞ்ஜீவனி சேவை, தனது விசாலமான வலைப்பின்னல் வாயிலாக தேசத்தின் தொலைவான பகுதிகளையும் சென்றடைந்து விட்டன. இதனால் ஆதாயம் பெறும் மக்களின் கதைகள் உங்களை உணர்ச்சிவயப்பட வைத்துவிடும். அந்தமான் நிக்கோபாரின் பாராடாங்க் தீவில், ஜராவா பழங்குடியைச் சேர்ந்த ஓஹோ தாஹானேவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. மூச்சு விடக்கூட சிரமமாக இருந்தது. இந்த நிலையில் உள்ளூர் சுகாதாரப் பணியாளர்கள், இ-சஞ்ஜீவனி வாயிலாக மருத்துவ வல்லுநரைத் தொடர்பு கொண்டார்கள். அந்தக் குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டிருந்தது, மருத்துவ வல்லுநர் கண்காணிப்பில் வந்தவுடனேயே, குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு காணத் தொடங்கியது.

லட்சத்தீவுகளின் கல்பேனிக்கருகே 60 வயது மதிக்கத்தக்க குன்ஹீ கோயாவின் உடல்நலத்தில் ஒரு நாள் திடீரென்று கோளாறு ஏற்பட்டது. அப்போது கடலின் மறுகரையில் கவரத்தியில் இருந்த அனுபவம் வாய்ந்த மருத்துவருடன் இ-சஞ்ஜீவனி வாயிலாக தொடர்பு கொள்ளப்பட்டது. அந்த அனுபவசாலி மருத்துவர், உள்ளூர் மருத்துவக் குழுவினருக்கு வழிகாட்ட, குன்ஹீ கோயாவுக்கு ஆசுவாசம் பிறந்தது.

லடாக்கின் ஜான்ஸ்கரிலே குஞ்ஜாங்க் டோல்மாவுக்கு மகப்பேறின் போது சில சிக்கல்கள் ஏற்பட்டன. இந்த நிலையில் இ-சஞ்ஜீவனி அவருக்கு உதவி புரிந்தது, மருத்துவ வல்லுனர் அவருக்கு உடனடியாக உதவினார்.

நாகாலாந்தில் 12 வயதேயான முஷேமுக்கு காதில் நோய் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் வந்திருந்தது. இவருக்கும் கூட இ-சஞ்ஜீவனியால் ஆதாயம் கிடைத்தது. மருத்துவ வல்லுநர் உடனடியாக இவருடைய நோயைக் கண்டறிந்து சரியான மருந்துகளைப் பரிந்துரைத்தார்.

ஒரு காலத்தில் மருத்துவரிடம் காட்டத் தேவையான சிறியதொரு மருத்துவப் பரிசோதனைக்குக் கூட மக்களுக்கு கணிசமான நேரம் ஆனது, சிரமங்கள் இருந்தன. இன்று நாடெங்கும் கிட்டத்தட்ட 1,90,000 ஆயுஷ்மான் மருத்துவ மையங்கள் மக்களுடைய வாழ்வில் புதிய புதிய வசதிகளைக் கொண்டு சேர்க்கின்றது. இந்த ஆரோக்கிய நிலையங்கள் ஒருவகையிலே, பஞ்சாயத்துக்களில் உடல்நல மையங்களாக மேம்பாடு அடைந்து வருகின்றன. மிகவும் உவப்பான செய்தி என்னவென்றால், இப்போது கிராமத்தவர்களும் கூட, நலமாக இருக்க வேண்டி குறித்தகாலத்தில் உடல் பரிசோதனை செய்து கொள்கிறார்கள். மேலும் இதில் இ-சஞ்ஜீவனி மிகவும் பெரிய பங்களிப்பை நல்கி வருகிறது.

இந்த மாதத் தொடக்கத்தில் நான் சென்னை சென்றிருந்தேன். அங்கு தேசத்தின் பல விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், இளைய திறமைசாலிகளை நான் சந்தித்தேன். ஒட்டுமொத்த மனித சமூகத்தின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய துறைகளில் எல்லாம் இன்று நமது இளைஞர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள், அப்படிப்பட்ட ஒரு துறை தான் மூளை ஆராய்ச்சி. இதோடு தொடர்புடைய சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தை நான் மெட்ராஸ் ஐஐடியிலே மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தேன்.

இந்த மையத்தில் ஒரு Brain Imaging Technology Platform - மூளை வரைபடத் தொழில்நுட்ப தளம் உருவாக்கப்பட்டு, இது உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதன் வாயிலாக மனித மூளையின் உயர் தெளிவுத்திறன் டிஜிட்டல் 3டி படங்கள் உருவாக்கப்பட்டு, இவற்றின் இலக்கு இனிவரும் நாட்களில் 100 மனித மூளைகளின் 3டி மேப்பிங் செய்து அவற்றை நுணுக்கமாக ஆராய்வது தான். ஒட்டுமொத்த உலகிலுமே இதுபோன்ற முதல் முயற்சி இது. இந்தப் பணிக்கு மிகவுயர் சக்தி கொண்ட சூப்பர் கணிப்பொறி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

என்னுடைய சென்னை பயணத்தில் மேலும் சில அனுபவங்களைப் பற்றி நான் உங்களோடு உரையாட விரும்புகிறேன். என்னுடைய முதல் அனுபவம், மெட்ரோவில் இளைஞர்களுடனான என்னுடைய உரையாடல். இரண்டாவது நிகழ்ச்சி தான் ஐஐடி மெட்ராஸுக்கு நான் சென்றது. இந்த ஊடாடல்களின் போது சுவாரசியமாக இருந்த ஒரு விஷயம் என்றால், நமது இளைஞர் சக்தி எப்படி பிரச்சினைகளுக்கு நூதனமான தீர்வுகளை ஏற்படுத்துவது தொடர்பாக பணியாற்றுகிறது என்பதைக் காண முடிந்தது. நான் சந்தித்த ஸ்டார்ட் அப்களில் ஒருவர் தங்கத்தின் தரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள அதை உரைத்துப் பார்ப்பதில் பணியாற்றுகிறார். இதனால் தங்கம் வாங்கும் போது ஏமாற்றப்படுவதிலிருந்து நாம் தப்பலாம்.

ஏமாற்றிப் பறிக்கப்பட்ட பணத்தை எப்படி மீட்டெடுப்பது என்பது தொடர்பான ஒரு தளத்தில் இளைஞர்களின் ஒரு குழு பணியாற்றி வருகிறது. அதே போல இன்னொரு குழு கர்ப்பப்பை புற்றுநோயைக் கண்டறிதலில் எவ்வாறு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம் என்பதில் ஈடுபட்டிருந்தது. நண்பர்களே, ஐஐடியில் நடந்த ஊடாடல் முழுமையாக ஆழ் தொழில்நுட்பத்தில் முனைப்பாய் இருந்தது. இந்த ஸ்டார்ட் அப்புகளுக்கு ஐஐடி மெட்ராஸின் இன்குபேஷன் சூழலமைப்பு உதவிகரமாக இருந்து வருகிறது.

இவற்றின் ஒரு ஸ்டார்ட் அப் தான் கடலுக்கு மேலே பறக்கும் ஒரு மின் வாகனத்தை மேம்படுத்தி வருகிறது. மேலும் ஒரு ஸ்டார்ட் அப்பானது ட்ரோன்கள் மற்றும் மின் வாகனங்களுக்கு விரைவான மின்னேற்றம் அடையும் பேட்டரிகளைத் தயாரித்து வருகிறது. ஒரு குழு, பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பணியாற்றி வருகிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

‘இ-சஞ்சீவினி’ முதல் சென்னை பயணம் வரை - மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் பகிர்வு
பந்து சேத விவகாரத்துக்கு பிறகு ஸ்டீவ் ஸ்மித் மீது மரியாதை அதிகமானது ஏன்? - மனம் திறக்கும் டுபிளெசிஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in