

திபெத்தில் யார்லங் ஸாங்போ நதி தொடங்கி பிரம்மபுத்திராவாக இந்தியாவில் பாயும் வரைபடம்.
பூகம்பமோ, பெருவெள்ளமோ, சுனாமியோ, நிலச்சரிவோ, எரிமலை வெடிப்போ அல்லது இன்னும் பிற இயற்கைச் சீற்றங்களோ, அது கோரத் தாண்டவம் ஆடும்போது மட்டும்தான் இயற்கையை விஞ்சிய சக்தி எதுவும் இல்லை என்பதை காட்டிச் செல்கிறது. ஆனாலும், மனிதர்கள் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை. பக்கவாட்டுச் சேதாரங்களைக் குறைத்துக் கொண்டு இயற்கையை எப்படிச் சுரண்டிக் கொள்ளலாம், அதை எப்படி அரசியல் ஆதாயமாக்கலாம், அதை எப்படி புவி அரசியலில் ஆதாயமாக்கலாம் என்று மட்டமாக மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.
திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை ஏரி வெடிப்பால் போடே கோசி ஆறு வழியாக நேபாளத்தில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து, ரசுவா மாவட்டமே சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதுவரை 350-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோன நிலையில், இந்தப் பேரிடர் இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் ஓர் எச்சரிக்கை மணி என்கின்றனர் புவியியல், சூழலியல் நிபுணர்கள். அது பற்றி சற்று சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.
இமயமலைப் பகுதி மிகவும் பலவீனமானது. அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது என்பது நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகளை ஏற்படுத்தி, பணிப்பாறை வெடிப்பு, பனிப்பாறை சரிவு என்று அடுக்கடுக்கான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அபாயம் அதிகம். அவ்வாறான இயற்கைப் பேரிடர்கள் நேரும்போது, கீழ்நோக்கி வெள்ளம் பாய்ந்து பேரழிவை மலையின், நதியின் கீழ்ப்பகுதியில் உள்ள இடங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
திபெத் சம்பவத்தில் இருந்து..
அது எப்படி நிகழும் என்பதை திபெத் சம்பவத்தில் இருந்து அறிவோம். திபெத்தில் ஆகஸ்ட் 26 காலை 8.30 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பனிப்பாறை வெடிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பனிப்பாறை வெடிப்புக்கு நிலநடுக்கம் காரணமாக இல்லாமலும் கூட இருக்கலாம். ஆனால், கவனிக்கப்பட வேண்டியது இயற்கையின் மீது மனிதர்கள் அழுத்தத்தை ஏற்படுத்தி இயற்கை பேரிடர் நிகழ செயற்கையாக வழிவகைகளை உருவாக்குவது.
அந்த வகையில், இமயமலையின் உயர் பகுதியில் அமைந்துள்ளது திபெத்தை சீனா கான்க்ரீட் கிராமங்களாலும், நகரங்களாலும் நிரப்பி வருகிறது. ராணுவ ரீதியாக தனது பலத்தை விஸ்தரித்துக் கொள்ள அங்கே கட்டுமானங்களை சீனா பெரிய அளவில் அமைத்துக் கொண்டே இருக்கின்றன. ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், இணைப்புச் சாலைகள், ராணுவ விமான நிலையங்களையும் கட்டிக் குவிக்கிறது. இதை உறுதிப்படுத்த பல செயற்கைக்கோள் புகைப்படங்களும் இருக்கின்றன.
இதற்கிடையேதான், திபத்திய தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள ‘யார்லங் ஸாங்போ’ (இந்தியாவில் பிரம்மபுத்திரா) நதியின் குறுக்கே உலகின் மெகா அணையை சீனா கட்டிக் கொண்டிருக்கிறது. 170 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அந்த அணை கட்டப்படுகிறது. அதில் நீர்மின் திட்டமும் உருவாக்கப்படுகிறது. இந்த அணை கட்டுமானம் முடிவடைந்தால் சீனா 300 பில்லியன் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். அப்படிச் செய்யும் பட்சத்தில் உலகிலேயே மிகப் பிரம்மாணடமான நீர் மின் திட்டமாக அது அமையும்.
சீனாவுக்கு பெருமை சேர்க்கும் திட்டத்தால், நதியின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள பகுதிகளுக்கு என்னென்ன ஆபத்து இருக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் உற்று கவனிக்க வேண்டிய ஒன்று என்று சுட்டிக்காட்டுகின்றனர் வல்லுநர்கள்.
திபெத்தில் பிறந்து இந்தியா வழியாக வங்கதேசம்...
‘யார்லங் ஸாங்போ’ நதி திபெத்திய பீடபூமியின் வழியாக பாய்கிறது. இந்தியாவில் நுழைந்ததும் இந்த நதி பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது. இந்த நதியின் குறுக்கே மெகா அணை கட்டப்பட்டால் கீழ் நதிப் பகுதியில் வாழும் இந்தியா, வங்கதேச மக்கள் லட்சக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கால்டெக் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் 2,000 கி.மீ நீளமுள்ள இமயமலை வளைவில் நான்கு குறிப்பிட்ட பகுதிகளில் நில அதிர்வு செயல்பாடு மிகப்பெரிய அழுத்தத்தை உருவாக்கி வருவதாக அடையாளம் கண்டுள்ளனர். அந்த வகையில் முழு இமயமலைப் பகுதியும் நில அதிர்வு அபாயம் அதிகம் உள்ள மண்டலமாகும்.
இந்தியா, வங்கதேசத்துக்கு எச்சரிக்கை மணி:
இமயமலையின் உயர் பகுதியில் நடைபெறும் பெரும் கட்டுமான நடவடிக்கைகளால் தூண்டப்படும் நில அதிர்வுகள், அணை உடைப்பைத் தூண்டும். அதனால் வெள்ளப் பெருக்கு என்பது ஒரு சங்கிலித் தொடர் போலவே நடக்கும்.
திபத்தில் யார்லாங் ஸாங்போவாக பாயும் நதி, பிரம்மபுத்திராவாக அசாமிலிருந்து வங்கதேசத்துக்குள் பாய்ந்து, பின்னர் பத்மா நதியுடன் இணைந்து வங்காள விரிகுடாவில் கலப்பதால், அதில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் இமயமலையில் கீழ்ப்பகுதியில் உள்ள நாடுகளான இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும்.
பிரம்மபுத்திரா படுகை ஏற்கெனவே அதிக செங்குத்தான சரிவுகள் கொண்டது. அங்கே அவ்வப்போது நில அதிர்வுகள் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், இமயமலையில் மேல்நிலைப் பகுதியில் மிகப் பெரிய கட்டுமானப் பணிகள் நடந்தால், அசாம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் வங்கதேசத்தில் வெள்ளம் மிகக் கோரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அணையே ஆபத்தாக மாறும் அபாயமும் இருக்கிறது!
ஏற்கெனவே சொன்னதுபோல் மிகவும் பலவீனமான இமயமலைப் பகுதியில் சீனா அணை கட்டுவது, அந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீரே நிலப்பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தி நில அதிர்வை தூண்டலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
South China Morning Post பத்திரிகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓர் எச்சரிக்கை அறிக்கை வெளியானது. அதில், சீனாவின் மெகா அணை திட்டமானது நிலநடுக்க அபாயம் கொண்ட கோட்டில் (ஃபால்ட் லைனில்) தான் அமைந்துள்ளது என்று சீன புவியியல் வல்லுநர்களே அரசை ஏற்கெனவே எச்சரித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், Sedimentary Geology and Tethyan Geology, என்ற சீன மொழி பத்திரிகையிலும், யர்லாங் ஸாங்போ மெகா அணைத் திட்டத்தில் பணியாற்றும் கட்டுமானப் பொறியாளர்கள் அணையைக் கட்டும்போது நிலச்சரிவு, அல்லது அணை உடைப்பு சம்பவங்கள் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கும்படி அணையை வடிவமைத்துக் கட்டுமாறு சீன அரசு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள், மெகா அணையில் தேக்கி வைக்கப்படும் நீரே, நில அதிர்வை ஏற்படுத்தலாம். இதை (reservoir‑triggered seismicity (RTS), அணையால் தூண்டப்படும் நில அதிர்வு என்று கூறுவர் என்று எச்சரிக்கின்றனர்.
இந்தியத் தரப்பிலோ, மெகா அணையைக் கட்டி பிரம்மபுத்திரா நதி நீரின் மீது வானாளவிய அதிகாரத்தை சீனா தன் கையில் வைத்துக் கொண்டு, நீரை ஆயுதமாக்கி நாடுகளுடன் சண்டை பிடிக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
இவை எல்லாவற்றையும்விட திபெத்தில் உருவாகும் யார்லுங் சாங்போ மற்றும் பிற நதிகள் குறித்த நீரியல் தரவுகளை சீனா, நதியின் கீழ்நிலை நாடுகளான இந்தியா, நேபாளத்துடன் இன்னமும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஏன், தற்போது அரசியல் ரீதியாக சீனாவுக்கு மிக நெருக்கமாக இருக்கும் வங்கதேசத்துடன் கூட அந்தத் தகவலை பகிரவில்லை. இது, இந்தியாவுக்கு பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும் போக்கு.
மின்சாரம், எரிபொருள் தன்னிறைவை எட்டுகிறோம் என்ற பெயரில் ஜீவ நதிகளில், கடலுக்கு அடியில், நிலத்துக்கு அடியில் பல்வேறு திட்டங்களையும் உலக நாடுகள் வகுத்து செயல்படுத்துகின்றன. ஆனால், அதற்கு ஓர் எல்லை இருக்கிறது. அதன் விலை மனித உயிர்கள் அல்ல. மனிதர்களை வாழவைக்கும் இயற்கையின் கொடைகளும் அல்ல என்று அறிவுரை சொல்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.