

பிரதிநிதித்துவப் படம்
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் நள்ளிரவில் பால்கனியில் சிக்கிக் கொண்ட இரு நண்பர்கள் நூதன முயற்சியாக பிளிங்கிட்டில் பொருள் ஆர்டர் செய்தனர். பிறகு டெலிவரி ஊழியர் மூலம் அவர்கள் மீட்கப்பட்டனர்.
இது தொடர்பான ஒரு வீடியோவை புனேவை சேர்ந்த மிஹிர் கஹுகர் என்பவர் பகிர்ந்துள்ளார். அவரும் அவரது நண்பரும் நள்ளிரவில் வீட்டின் பால்கனிக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு பின்னால் இருந்த கதவு தற்செயலாக பூட்டிக்கொண்டதால் தாங்கள் பால்கனிக்குள் சிக்கிக் கொண்டதை மிகவும் தாமதமாகவே உணர்ந்தனர்.
வீட்டுக்குள் பெற்றோர்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் பீதியை ஏற்படுத்தாமல் அவர்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் வித்தியாசமான ஒரு முயற்சியில் இறங்கினர். பிளிங்கிட்டில் ஒரு பொருள் ஆர்டர் செய்தனர். இதையடுத்து வீட்டுக்கு வந்த டெலிவரி ஊழியரிடம் தங்களின் நிலைமையை விளக்கினர்.
வீட்டின் சாவி எங்குள்ளது, பிரதான கதவை எப்படி திறப்பது போன்றவற்றை அவருக்கு துல்லியமாக விளக்கினர். இதன் மூலம் பால்கனி கதவு திறக்கப்பட்டு, அவர்கள் இருவரும் மீட்கப்பட்டனர். ஜன.5ம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 37 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.