

அமராவதி: ஆந்திராவில் பெண்களை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பேருந்து பயண திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார்.
ஆந்திராவில் ‘சூப்பர் சிக்ஸ்’ திட்டம் அமல்படுத்தப்படும் என கடந்த 2024 தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தார். தேர்தலுக்கு பின் ஆட்சியை கைப்பற்றிய அவர், அத்திட்டத்தை படிப்படியாக அமல்படுத்தி வருகிறார். இதன்படி மாதந்தோறும் முதியோர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம், சர்க்கரை நோய், எய்ட்ஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் என உதவித் தொகை வழங்கப்படுகிறது.
வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் அண்ணா கேன்டீன்கள் திறக்கப்பட்டு ரூ.5-கு சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது. தாய் மடி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு தாய்மார்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ‘மாற்றுத் திறனாளிகளின் சக்தி’ எனும் பெயரில் ஆந்திர மாநிலம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச அரசுப் பேருந்து பயண திட்டத்தை சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். குண்டூர் மாவட்டம், மங்களகிரி பேருந்து நிலையத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த அவர் மாற்றுத் திறனாளிகளுடன் பேருந்தில் பயணம் செய்தார். துணை முதல்வர் பவன் கல்யாண், அமைச்சர்கள் லோகேஷ் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
சந்திர பாபு நாயுடு கூறுகையில், "இத்திட்டம் மூலம் மாநிலத்தில் 12.5 லட்சம் பேர் பயனடைவர். 5 ரக பேருந்துகளில் இவர்களில் பயணம் செய்யலாம். கடந்த ஆட்சியில் இவர்களுக்கு தலா ரூ.500 நிதி உதவி வழங்கப்பட்டது. எங்களின் ஆட்சியில் இது தற்போது தலா ரூ.6 ஆயிரமாக வழங்கப்படுகிறது" என்றார்.