

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் நேதாஜி நகரை சேர்ந்தவர் அஜித் கோபாலகிருஷ்ண சராஃப் (81). கிரானைட் தொழிலதிபரான இவருக்கு கடந்த பிப்ரவரி 5-ம் தேதி வாட்ஸ் அப் மூலம் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் தன் பெயர் கே.சிவ சுப்ரமணியம் என்றும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர், பண மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் நரேஷ் கோயலுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருப்பதை சிபிஐ கண்டறிந்துள்ளது. அதனால், உங்கள் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே உங்களது வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு 7 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். இந்த தகவலை வெளியே கசிய விட்டால் உங்களையும் உங்கள் மனைவியையும் கைது செய்துவிடுவோம்.
நீங்கள் அனுப்பிய பணத்தை சரிபார்த்த பின்னர், உங்களது வங்கி கணக்குக்கே திருப்பி அனுப்பி விடுவோம். நாங்கள் உங்களை 24 மணி நேரமும் கண்காணித்து கொண்டே இருப்போம். எங்களிடம் இருந்து தப்ப முயன்றால் உள்ளூர் போலீஸார் மூலம் கைது செய்வோம் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.15.45 கோடியை படிப்படியாக அனுப்பி உள்ளார்.
ஆனால், 15 நாட்களுக்கு மேலாகியும் பணம் தனது வங்கி கணக்கில் செலுத்தப்படாததால் அதிர்ச்சி அடைந்தார். நேற்று பெலகாவி மாநகர இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் அவர் தெரிவித்த வங்கி கணக்கில் இருந்த ரூ.90 லட்சம் தொகையை முடக்கியுள்ளனர். மேலும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.