

போபால்: ம.பி.யின் ஜபல்பூர் மாவட்டத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
ம.பி.யின் ஜபல்பூர் மாவட்டத்தில் நர்மதை ஆற்றில் பார்கி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சுற்றுலாப் பயணிகளுக்காக உல்லாசப் படகு இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று 31 பயணிகளுடன் சென்ற இந்தப் படகு பலத்த காற்று வீசியதில் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
படகில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக பயணிகள் ஏற்றப்பட்டதே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.இதுபற்றிய தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதையடுத்து நடைபெற்ற மீட்புப் பணியில் 15 பேர் உயிருடனும் 4 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி அங்கு தீவிரமாக நடைபெறுகிறது. மீட்கப்பட்டவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.