

புதுடெல்லி: மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் திரவ உந்து அமைப்புகள் மையத்தில் தினக்கூலிகளாகப் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரமாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் திரவ உந்து அமைப்புகள் மையத்தில் பொருள்களை ஏற்றி இறக்கும் தினக்கூலிகளாக 1991-1997 காலக் கட்டத்தில் சேர்ந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆர். ஐயப்பன், பி. ஆறுமுகன், ஆர். சண்முக ரவி, வி. ராஜேஷ் குமார், எஸ். சுயம்பு, ரவிதுரை, எஸ்.எம். நீல ராமன் உள்ளிட்டோர் பணியாற்றி வந்தனர். இதனிடையே, தற்காலிக தொழிலாளர்களை நிரந்தப்படுத்தும் திட்டத்தை உருவாக்க மத்திய பணியாளர் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றமும் கடந்த 2011-ம் ஆண்டு, உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
ஆனால் மத்திய அரசு, தொழிலாளர்களை நிரந்தப்படுத்தும் திட்டத்தை உருவாக்குவதற்கு பதிலாக மீண்டும் தற்காலிக பணியை உருவாக்கியது. இத்திட்டத்தை எதிர்த்துத் தற்காலிக தொழிலாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு விசாரித்து அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
நாட்டின் முக்கியமான வளர்ச்சியில் மறைமுகமாகப் பங்களிப்பு செய்யும் தொழிலாளர்களைச் சமவுரிமையுடன் முன் மாதிரியான பணி அமர்த்துநராகச் செயல்பட வேண்டிய அரசே பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது. தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு ஏற்று நடக்கவில்லை.
இந்த மேல்முறையீடு மனுக்கள் ஏற்கப்படுகின்றன. தற்காலிக தொழிலாளர்களைக் கடந்த 2010, செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி பின்தேதியிட்டு 4 வாரங்களுக்குள் நிரந்தரமாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. இத்தீர்ப்பு இஸ்ரோவில் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்கள் அனைவருக்கும் பொருந்தும். பொறியாளர்கள், அறிவியலாளர்களின் பங்களிப்பால் மட்டும் இந்திய விண்வெளித் திட்டம் வெற்றி பெறவில்லை. உதவிப் பணியாளர்களின் பங்களிப்பும் இந்த வெற்றியில் உண்டு.
பணி அங்கீகார விவகாரத்தில் அத்தகைய பணியாளர்களைப் பாகுபாட்டுடன் நடத்துவதோ, அலட்சியம் காட்டுவதோ, நிலவுக்கும், அதற்கு அப்பாலும் இந்தியாவைக் கொண்டு சென்ற கூட்டு முயற்சி என்னும் பண்பைக் குலைப்பதாகிவிடும். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.