ராஜஸ்தானில் கணவர் கொலையை விபத்தாக ஜோடித்த மனைவி உட்பட 4 பேர் கைது: நடந்தது என்ன?

கொலையான ஆஷிஷ் உடன் அஞ்சு

கொலையான ஆஷிஷ் உடன் அஞ்சு

Updated on
2 min read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவர் ஆஷிஷை (27) கொலை செய்து, அதை சாலை விபத்தாக ஜோடித்த மனைவி அஞ்சு என்கிற அஞ்சலி (23) மற்றும் அவரது ஆண் நண்பர் சஞ்சு என்கிற சஞ்சய் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் கடந்த மாதம் 30-ம் தேதி ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் பகுதியில் நடந்துள்ளது. முதலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆஷிஷ் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதையடுத்து சாலை விபத்து வழக்காக இந்த சம்பவத்தை போலீஸார் பதிவு செய்தனர்.

உயிரிழந்த ஆஷிஷின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதில் அவரது உடலில் இருந்த காயங்கள் சாலை விபத்தால் ஏற்பட்டது அல்ல என்பதும், கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்பதும் உடற்கூறு ஆய்வறிக்கையில் உறுதியானது. இதையடுத்து இந்த வழக்கை வேறு கோணத்தில் போலீஸார் விசாரித்தனர்.

நடந்தது என்ன? - இந்த கொலை வழக்கு தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அம்ரிதா துஹான் கூறியதாவது: மூன்று மாதங்களுக்கு முன்னர் (அக்.30) கொலை செய்யப்பட்ட ஆஷிஷ் மற்றும் அஞ்சு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் அஞ்சுவுக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது. அவர் சஞ்சுவை நேசித்துள்ளார். இந்த விவகாரம் அஞ்சுவின் குடும்பத்தினருக்கும் தெரியும். இந்த சூழலில்தான் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்துக்கு பிறகு சஞ்சுவை சந்திக்கும் நோக்கில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய விரும்புவதாக ஆஷிஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அஞ்சு தெரிவித்துள்ளார். அதற்கு ஆஷிஷ் மறுத்துவிட்டதாக தகவல்.

இதன் பின்னர் தாய் வீட்டுக்கு சென்றார் அஞ்சு. அங்கு சஞ்சுவை சந்தித்து ஆஷிஷை கொலை செய்வது குறித்து திட்டமிட்டுள்ளார். பின்னர் கணவர் வீட்டுக்கு வந்த அஞ்சு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று தங்கள் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். அன்று மாலை நடைப்பயிற்சி செல்வதாக சொல்லி சென்றுள்ளார். அவருடன் ஆஷிஷ் சென்றுள்ளார்.

முன்கூட்டியே இதுகுறித்து சஞ்சுவுக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கு ஏற்கெனவே சஞ்சு மற்றும் அவரது நண்பர்கள் ரோஹித், சித்தார்த் ஆகியோர் காத்திருந்தனர்.

அப்போது ஆஷிஷை தாக்குமாறு அஞ்சு சிக்னல் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அவரை சஞ்சு மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து தாக்கியுள்ளனர். மஃப்ளரை பயன்படுத்தி ஆஷிஷின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில் சிக்கக் கூடாது என்பதற்காக கொலை வழக்கை விபத்து போல சித்தரித்துள்ளனர்.

அதேநேரத்தில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஆஷிஷின் செல்போன் மற்றும் தனது காதணி (கம்மல்) பறிக்கப்பட்டதாக அஞ்சு தெரிவித்தார். அவரது இந்த முரண்பட்ட கருத்து காரணமாக விசாரணை வளையத்துக்குள் அஞ்சு கொண்டுவரப்பட்டார். அவரது போனின் அழைப்பு விவரங்களை சரி பார்த்ததில் சஞ்சுவுடன் தொடர்ந்து பேசி வந்தது தெரிந்தது.

இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் இந்த கொலையில் தொடர்புடைய அஞ்சு, சஞ்சு, ரோஹித், சித்தார்த் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த குற்றத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டுவதில் போலீஸார் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>கொலையான ஆஷிஷ் உடன் அஞ்சு</p></div>
மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 18 தொழிலாளர்கள் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in