

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம், பசோலி கிராமத்தில் நீர் மின் நிலையம் அமைந்துள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அங்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நீர் மின் நிலையத்தில் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஐஎஸ்எப் வீரர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
அப்போது அவதேஷ் குமார் என்ற வீரர், ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் துணை கமாண்டர் அங்கித் குமார் பாண்டே, சப்-இன்ஸ்பெக்டர் லஷ்மண் சிங், காவலர்கள் ரபீக் அகமது, சந்தீப் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 4 பேரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய தலைமைக் காவலர் அவதேஷ் குமார் கைது செய்யப்பட்டார். எதற்காக அவர் தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.