முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மனைவி சென்னம்மா காலமானார்

மனைவி சென்னம்மாவுடன் ஹெச்.டி. தேவ கவுடா

மனைவி சென்னம்மாவுடன் ஹெச்.டி. தேவ கவுடா

Updated on
1 min read

பெங்களூரு: முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் மனைவி சென்னம்மா மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 89.

மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக சென்னம்மா, பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

சென்னம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து அவரது மகனும், மத்திய அமைச்சருமான ஹெச்.டி. குமாரசாமி கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். அவருக்கு இதயத்தில் அடைப்பு அல்லது இறுக்கம் இருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்ததோடு, மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்துள்ளது. இன்று காலை அவரது உடல்நிலை சீராக இருந்ததாக கூறப்பட்டது. கணவர் ஹெச்.டி.தேவகவுடா, மகன்கள் ஹெச்.டி. குமாரசாமி, ஹெச்.டி. ரேவண்ணா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து அவரை நேரில் பார்த்தனர். மருமகள் பவானி ரேவண்ணா மருத்துவமனையிலேயே தங்கி தனது மாமியாரை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக சென்னம்மா உயிரிழந்தார். ஹெச்.டி.குமாரசாமி, ரேவண்ணா உள்ளிட்ட 4 மகன்கள், இரண்டு மகள்களுக்குத் தாயாரான சென்னம்மா, குடும்பத்தையும் தனது கணவரையும் நன்கு கவனித்து வந்துள்ளார்.

சென்னம்மாவின் மறைவை அடுத்து மருத்துவமனைக்கு வந்து பார்த்த மத்திய அமைச்சர் சோமண்ணா செய்தியாளர்களிடம் பேசும்போது, “சென்னம்மா தேவகவுடா எனக்கு ஒரு தாயைப் போன்றவர். தேவகவுடாவின் வீட்டில் இருந்தே எனது அரசியல் பயணம் தொடங்கியது. அவர் தேவகவுடாவுக்கு உறுதுணையாக இருந்தார். இன்பம் துன்பம் இரண்டையும் சமமாக ஏற்றுக்கொண்டார். தேவகவுடா பிரதமராவதற்கு சென்னம்மாவின் பங்களிப்பு அளப்பரியது” என்று கூறினார்.

சென்னம்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலேஜி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எளிமை மற்றும் கண்ணியத்தின் உண்மையான வடிவமாகத் திகழ்ந்த சென்னம்மா, பொதுவாழ்வில் இருந்து விலகியே இருந்தார். எனினும், மக்கள் சேவை சார்ந்த தனது கணவரின் அரசியலுக்கு பெரும் பலமாகத் திகழ்ந்தார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். இந்த துயரத்தை தாங்கிக்கொள்ளும் மனவலிமையை தேவ கவுடாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கடவுள் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>மனைவி சென்னம்மாவுடன்&nbsp;ஹெச்.டி. தேவ கவுடா</p></div>
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in