பணமோசடி வழக்கில் குஜராத் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சர்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறை!

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சர்மா

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சர்மா

Updated on
2 min read

அகமதாபாத்: 2003 மற்றும் 2006 க்கு இடையில் குஜராத் மாநிலத்திலுள்ள கட்ச் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, ​​சலுகை விலையில் அரசு நிலத்தை ஒதுக்கியது தொடர்பான பணமோசடி வழக்கில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சர்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜ்கோட்டில் உள்ள சிஐடி போலீசார் பிரதீப் சர்மா மீது மார்ச் 2010 இல் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து 2010 செப்டம்பரில் ஐபிசி பிரிவின் கீழ் மற்றொரு வழக்கு தொடரப்பட்டது. பிரதீப் சர்மா அரசாங்க கருவூலத்திற்கு ரூ.1.20 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிஐடி குற்றம் சாட்டியது.

2010 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், மார்ச் 2012 இல் அமலாக்கத் துறையின் அகமதாபாத் மண்டல அலுவலகம், பிரதீப் சர்மா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது. இதனை தொடர்ந்து சர்மா ஜூலை 2016 இல் கைது செய்யப்பட்டார். பின்னர் மார்ச் 2018 இல் அவர் ஜாமீன் பெற்றார். விசாரணையின் போது, ​​காந்திநகர் மாவட்டத்தில் உள்ள நிலம் மற்றும் ஒரு வீடு உட்பட சர்மாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக பறிமுதல் செய்தது.

விசாரணைகளில், மாவட்ட நில விலை நிர்ணயக் குழுவின் தலைவராக இருந்த பிரதீப் சர்மா, விதிமுறைகளை மீறி வெல்ஸ்பன் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு சலுகை விலையில் ஒரு பெரிய அரசு நிலத்தை வழங்கியது தெரியவந்தது.

இதற்காக வெல்ஸ்பன் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனங்களிடமிருந்து பெற்ற நிதியை பிரதீப் சர்மா தனது மனைவியின் வங்கிக் கணக்கின் மூலம் பெற்றுள்ளார். இந்த நிதி வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவும், விவசாய நிலத்தை வாங்கவும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிறுவனத்திற்கு தேவையற்ற சலுகைகளை வழங்கியதற்காக, அமெரிக்காவில் வசிக்கும் சர்மாவின் மனைவியின் கணக்கில் ரூ.29.5 லட்சம் வரவு வைக்கப்பட்டதாகவும் அரசு தரப்பு கூறியது. வெல்ஸ்பன் குழும நிறுவனங்களுக்கு விவசாய நிலத்திற்கு, விவசாயம் அல்லாத நிலம் என்ற அந்தஸ்தை வழங்கியதன் மூலம் இந்த முறைகேட்டில் சர்மா ஈடுபட்டுள்ளார்.

சிறப்பு பிஎம்எல்ஏ நீதிமன்ற நீதிபதி கே.எம்.சோஜித்ரா, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பிரிவுகள் 3 மற்றும் 4 இன் கீழ் சர்மாவை குற்றவாளி என தீர்ப்பளித்தார், மேலும் விசாரணையின் போது அமலாக்கத்துறை கைப்பற்றிய சொத்துக்கள் மத்திய அரசால் பறிமுதல் செய்யப்படும் என்று உத்தரவிட்டார்.

முன்னதாக, ஏப்ரல் 2025 இல், 2004 ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்திற்கு அரசு நிலத்தை ஒதுக்கியதில் முறைகேடுகள் தொடர்பான 2011 ஆம் ஆண்டின் வழக்கில், புஜ் நீதிமன்றம் சர்மாவுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தது.

சா பைப்ஸ் பிரைவேட் லிமிடெட் சம்பந்தப்பட்ட அந்த வழக்கு, கட்ச் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் பொது கருவூலத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து பதிவு செய்யப்பட்டது. சர்மா மற்றும் மூன்று பேர் அந்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர், இதனையடுத்து சர்மா தற்போது சிறையில் உள்ளார்.

<div class="paragraphs"><p>முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சர்மா</p></div>
"கோவா தீ விபத்து குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு" - முதல்வர் பிரமோத் சாவந்த் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in