

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ், சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா குறித்து சர்ச்சைகள் எழுந்தன. பல்வேறு நபர்களின் அழுத்தம் காரணமாகவும், குறுக்கீடு காரணமாகவும் சி.வி. ஆனந்த போஸ் ராஜினாமா செய்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து அவர் நேற்று கொல்கத்தா விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேற்கு வங்க ஆளுநராக நான் 1,200 நாட்கள் பதவி வகித்தேன். இது கிரிக்கெட்டில் 12 செஞ்சுரிகள் அடிப்பதற்கு சமம்.
நான் ராஜினாமா செய்தது மனப்பூர்வமாக எடுத்த முடிவு. பல முறை யோசித்த பின்னரே நான் ராஜினாமா செய்தேன். எப்போது ராஜினாமா செய்யவேண்டும் என்பதற்கு எனக்கு அதிக சந்தர்ப்பம் தரப்பட்டது. சரியான நேரம் வந்ததும் ராஜினாமா செய்தேன். இதில் யாருடைய குறுக்கீடும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.