

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலில் தங்கம் காணாமல் போன வழக்கு தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் நேற்று கைது செய்யப்பட்டார்.
கடந்த 2019-ல் சபரிமலை கோயில் கருவறை கதவு நிலைகள் மற்றும் துவார பாலகர் சிலைகளுக்கு மின்முலாம் பூசுவதற்காகத் தங்கத்தைக் கொண்டு சென்றபோது தங்கம் திருடப்பட்டதாக கூறி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியது.
2025-ல் தேவஸ்வம் போர்டு தலைவராக பிரசாந்த் இருந்தார். அப்போது, 2019-ல் நடந்த தங்கம் திருட்டை மறைப்பதற்காக பழுது இல்லாத துவார பாலகர் சிலைகளில் பழுது இருப்பதாகக் கூறி மீண்டும் அனுப்பி வைத்ததாகச் சிறப்பு புலனாய்வுக் குழு கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தேசிய உலோகவியல் ஆய்வகத்தின் அறிக்கை மூலம், இந்த வழக்கில் குற்றவாளிகள் தங்கம் திருடிய முறை மற்றும் சதித்திட்டம் குறித்த தெளிவான அறிவியல் பூர்வ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள இல்லத்தில் வைத்து பிரசாந்தை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது. இதே வழக்கு தொடர்பாக தேவஸ்வம் போர்டின் முன்னாள் உறுப்பினர் அஜி குமார் மற்றும் திருவாபரண ஆணையர் ஆர்.ரெஜிலால் ஆகியோரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்படுவதற்கு முன் முகநூலில் பதிவிட்ட பிரசாந்த், தன் மீதான நடவடிக்கை முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், 2019-ல் நடந்த தங்கம் திருட்டை வெளிக்கொண்டு வந்ததே தங்கள் நிர்வாகம் தான் என்றும் கூறி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.