

புதுடெல்லி: குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து மும்பைக்கு ஒரு காரில் பெருமளவில் ‘எம்டி’ எனப்படும் மெபெட்ரோன் போதைப் பொருள் கடத்தப்படுவதாக சூரத் குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், டெல்லி - மும்பை விரைவுச் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே வந்த சந்தேகத்துக்கிடமான கார் ஒன்றை அதிகாரிகள் வழிமறித்துச் சோதனையிட்டனர்.
அப்போது, காரில் இருந்த 977 கிராம் போதைப் பொருளைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 30 லட்சமாகும். இதையடுத்து, காரில் பயணித்த மலேசியன் ஏர்லைன்ஸ் முன்னாள் பெண் ஊழியரான மான்சி சையத் (41) மற்றும் அவரது கூட்டாளி சோஹைல் சுலைமான் ஷேக் (20) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அவர்களிடம் இருந்து பல மொபைல் போன்கள், போதைப் பொருள்களைப் பொட்டலமிடப் பயன்படும் பிளாஸ்டிக் பைகள், கன்டெய்னர்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும்போது பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்துள்ள மான்சி சையத், 2015 முதலே போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 100 கிராம் போதைப் பொருளுடன் கைதான மான்சி, அந்த வழக்கில் சுமார் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தில் உள்ள போதைப் பொருள் நெட்வொர்க்குடன் இவருக்கு இருந்த தொடர்புகள் ஏற்கெனவே அம்பலமான நிலையில், தற்போதைய கடத்தலுக்கும் அதற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.