விமானம் நொறுங்கி தீப்பிடித்ததில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழப்பு

குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் பட்னாவிஸ் இரங்கல்
விமானம் நொறுங்கி தீப்பிடித்ததில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழப்பு
Updated on
2 min read

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நேற்று நடைபெற்ற விமான விபத்தில் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் (67) உட்பட 5 பேர் உயிரிழந்தனர். அவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் உட்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் நேற்று காலை 8.10 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து பாராமதிக்கு ‘லியர்ஜெட் 45’ என்ற சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தார். இது டெல்லியைச் சேர்ந்த விஎஸ்ஆர் வென்சர்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது. பம்பார்டியர் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தயாரிப்பான லியர்ஜெட் 45 விமானத்தில் அஜித் பவாரின் பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ், பைலட்கள் சுமித் கபுர், சம்பவி பதக், விமான உதவியாளர் ஆகிய 4 பேர் சென்றனர்.

மும்பையில் இருந்து பாராமதி 256 கி.மீ. தொலைவில் உள்ளது. விமானத்தில் 45 நிமிடத்தில் செல்லலாம். நேற்று காலை 8.18 மணியளவில் பாராமதி விமான நிலையத்தின் ஓடுபாதை பனிமூட்டத்தால் தெரியவில்லை. விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு

அவர்கள் அளித்த உத்தரவின்படி விமானத்தை பைலட் தரையிறக்க 2 முறை முயற்சி செய்தார். மூன்றாவது முறையாக 8.43 மணிக்கு விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதேநேரத்தில் 8.44 மணியளவில் விமான நிலைய ஓடு பாதையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் விமானம் தரையில் மோதி வெடித்தது.

இதையடுத்து மீட்புப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு, விமானத்தில் இருந்த 5 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் தீக்காயத் தால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. பிப்ரவரி 5-ம் தேதி 5 ஜில்லா பரிஷத் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அவர் பாராமதி தொகுதிக்கு விமானத்தில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மறைந்த அஜித் பவாருக்கு சுனேத்ரா பவார் என்ற மனைவியும், ஜெய், பார்த் பவார் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

3 நாள் துக்கம்: அஜித் பவார் மறைவை முன்னிட்டு மகாராஷ்டிராவில் நேற்று முதல் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. அங்கு தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. நாளை வரை அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன்தான் அஜித் பவார். முதன் முதலில் 1991-ல் பாராமதி மக்களவை தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தொடர்ந்து 5 முறை தொகுதியை அவர் தக்கவைத்தார். பல்வேறு அரசுகளின் கீழ் 6 முறை துணை முதல்வராக இருந்துள்ளார். மகாராஷ்டிராவில் நீண்ட காலம் துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார்.

அஜித் பவார் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் அளித்த பேட்டியில், ‘‘அஜித் பவாரின் இழப்பை நம்ப முடியவில்லை. நல்ல நண்பரை இழந்துவிட்டேன். அவரது இடத்தை யாரும் நிரப்ப முடியாது. மகாராஷ்டிர பிரச்சினைகளை நன்கு அறிந்த மக்கள் தலைவர். இதுபோன்ற தலைமையை உருவாக்க பல ஆண்டுகள் ஆகும்’’ என்றார்.

விசாரணை: அஜித் பவார் மரணம் குறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ‘‘அஜித் பவார் உள்ளிட்ட ஐவர் உயிரிழப்புக்குக் காரணமான விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். அவர் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர். அவரது மறைவு மகாராஷ்டிராவுக்கு ஒரு பேரிழப்பு. இந்த நாள் மகாராஷ்டி ராவுக்கு ஒரு கருப்பு நாள். இதுபோன்ற ஒரு துயர சம்பவம் மீண்டும் நிகழாத அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார்.

இறுதிச் சடங்கு: அஜித் பவாரின் உடலுக்கு பாராமதியில் உள்ள வித்ய பிரதிஸ்தன் மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மக்களவையில் அஜித் பவார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

விமானம் நொறுங்கி தீப்பிடித்ததில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழப்பு
4-வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது நியூஸிலாந்து: துபே அதிரடி ஆட்டம் வீண்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in