4-வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது நியூஸிலாந்து: துபே அதிரடி ஆட்டம் வீண்

ஷிவம் துபே

ஷிவம் துபே

Updated on
1 min read

விசாகப்பட்டினம்: இந்திய கிரிக்கெட் அணி உடனான 4-வது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 50 ரன்களில் வெற்றி பெற்றது. 216 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணிக்காக 23 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அதிரடி ஆட்டம் ஆடியிருந்தார் இந்தியாவின் ஷிவம் துபே.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் தொடரை 2-1 என்ற நியூஸிலாந்து அணி கைப்பற்றியது. தொடர்ந்து இரு அணிகளும் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் 3 ஆட்டங்களில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா. இந்நிலையில், இந்த தொடரின் 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. கான்வே 44, டிம் செய்ஃபெர்ட் 62, கிளென் பிலிப்ஸ் 24, மிட்செல் 39 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். பும்ரா மற்றும் பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். நியூஸிலாந்து கேப்டன் சான்ட்னர் ரன் அவுட்டாகி விக்கெட்டை இழந்தார்.

216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. அபிஷேக் சர்மா (0) மற்றும் சூர்யகுமார் யாதவ் (8) சொற்ப ரன்களில் வெளியேறினர். சஞ்சு சாம்சன், 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் 23 பந்துகளில் 65 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார் ஷிவம் துபே. 3 ஃபோர்கள் மற்றும் 7 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். அவர் ஆட்டமிழந்த பின்னர் ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பும்ரா மற்றும் குல்தீப் ஆகியோரும் விக்கெட்டை இழந்தனர். 18.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா. இதன் மூலம் 50 ரன்களில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. இந்த தொடரின் கடைசி மற்றும் 5-வது டி20 போட்டி வரும் 31-ம் தேதி நியூஸிலாந்தில் நடைபெற உள்ளது.

<div class="paragraphs"><p>ஷிவம் துபே</p></div>
“தோனி, சிஎஸ்கே அணியில் விளையாடுவேன் என நான் நினைத்ததில்லை” - சர்பராஸ் கான் பகிர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in