வாரணாசி கங்கை நதியில் பாஜக கவுன்சிலர் படகில் அசைவம் சமைத்து மது விருந்து - 5 பேர் கைது

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: வாரணாசியில் கங்கை ஆற்றில் பாஜக கவுன்சிலரின் படகில் கோழிக்கறி சமைத்து மது விருந்து நடத்தப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து, சம்மந்தப்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் ஓடும் கங்கை நதி இந்துக்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. கடந்த மார்ச் 16-ம் தேதி 18 முஸ்லிம் இளைஞர்கள் படகில் சென்று ரம்ஜான் நோன்பு இப்தார் நடத்தினர்.

அப்போது, படகில் அசைவ பிரியாணியை எடுத்துச் சென்று உண்ணும் வீடியோ வைரலாகியது. இதையடுத்து வாரணாசி பாஜக இளைஞர் பிரிவு தலைவர் ரஜத் ஜெய்ஸ்வால் அளித்த புகாரின் பேரில் 18 இளைஞர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்தேறி உள்ளது. இதில், தசாஸ்வமேத் காட் பகுதியில், கங்கை நதியின் நடுவே படகு ஒன்றில் இறைச்சி சமைத்து ஐந்து பேர் மது விருந்தும் நடத்தி உள்ளனர். இது குறித்த வீடியோ நேற்று முன் தினம் மாலை சமூக வலைதளங்களில் வைரலானது.

இப்படகு, வாரணாசி மாநகராட்சியின் பாஜக நியமனக் கவுன்சிலரான சத்யநாராயண் சஹானிக்கு சொந்தமானது. வீடியோவில் இது பதிவாகி உள்ளது. படகில் இருந்த ஐவரும் அவருக்கு நெருக்கமானவர்கள் எனக் கருதப்படுகிறது.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரையும் கைது செய்து படகையும் பறிமுதல் செய்தனர்.

தீபக் குமார், அஜய் சாஹ்னி, அருண் குமார் சாஹ்னி, அனுராக் நிஷாத், ராகுல் சாஹ்னி ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக உத்தரப் பிரதேச காவல்துறையின் தசாஸ்வமேத் பகுதி ஏசிபி அதுல் அஞ்சன் திரிபாதி கூறுகையில், “கைதான ஐவரும் 25 முதல் 32 வயதுடையவர்கள். ஆனால், இந்த வீடியோ பழையதாகத் தெரிகிறது. படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என எச்சரித்தார்.

வாரணாசி மாநகராட்சி எல்லைக்குள் இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்குத் தடை விதிக்கும் தீர்மானத்தை பாஜக மேயர் நிறைவேற்றியுள்ளார். இந்த உத்தரவு, அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வரவுள்ளது. இந்நிலையில், வாரணாசியில் கங்கை ஆற்றில் பாஜக கவுன்சிலருக்கு சொந்தமான படகு ஒன்றில் அசைவம் சமைத்து மது விருந்து நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,680 குறைவு; வெள்ளியும் சரிந்தது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in