

புதுடெல்லி: மேற்கு வங்க மக்கள் பல நூற்றாண்டுகளாக மீன் உணவுக்குப் பழகி விட்டனர். மேலும், காளி, துர்கா உள்ளிட்ட கடவுள்களுக்கும் மீன் உணவுகளைப் படைக்கின்றனர். அங்கு மீன் உணவை சைவமாகக் கருதி உண்ணும் பிராமணர்களும் அதிகம். இந்த மீன் உணவு தேர்தல் பிரச்சாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
இது குறித்து, முதல்வர் மம்தா பிரச்சாரத்தில் பேசுகையில், "பாஜக ஆட்சிக்கு வந்தால், வங்காள மக்களின் உணவுப் பண்பாடு, குறிப்பாக நமக்கு மிகவும் பிடித்தமான மீன் மற்றும் இறைச்சி உண்ணுவதைத் தடை செய்து விடுவார்கள்" என்றார். இதே கருத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களும் மீன் உணவைப் பயன்படுத்தி பாஜகவை விமர்சிக்கின்றனர்.
இதற்கு பதிலடியாக மீன் உணவைப் புகழ்ந்தும், பாரம்பரியத்தைப் போற்றியும் பாஜக பிரச்சாரம் செய்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் மீன் சந்தைகளுக்குச் செல்வதும், மீன் வாங்குவதும், அதைப் பொது வெளியில் உண்பதையும் வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.
மாநில பாஜகவின் மூத்த தலைவரும், கரக்பூர் நகர தொகுதி வேட்பாளருமான திலீப் கோஷ், மீன் உணவு மீதுள்ள ஆர்வத்தை வெளிப்படையாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தவர். சமீபத்தில் திலீப் கோஷ் கரக்பூரில் உள்ள ஒரு மீன் சந்தையில் விற்பனையாளர்களுடன் கலந்துரையாடினார்.
அது தொடர்பான புகைப்படங்களையும் அவர் தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பிதான் நகர் தொகுதி வேட்பாளர் சரத்வத் முகர்ஜி சமீபத்தில் ஒரு பெரிய கட்லா மீனை கையில் ஏந்தி வீதிகளில் நடத்திய பிரச்சாரம் வைரலானது. அதேபோல், கொல்கத்தாவை ஒட்டியுள்ள ராஜர்ஹாட்-கோபால்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தருண்ஜோதி திவாரி, மீன் சந்தைக்குச் சென்று பிரச்சாரம் செய்ததுடன், அங்கே மீன் சாதம் சாப்பிட்டுக் கொண்டே பேட்டியளித்தார்.
இதனால் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரின் தேர்தல் வியூகம் பிசுபிசுத்து வருகிறது. எனினும், மீன் விவகாரத்தில் பாஜக செய்வது போலித்தனம். இதை நம்ப வேண்டாம் என்று ஆளும் திரிணமூல் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.