

புதுடெல்லி: இந்திய மக்கள் அதிகம் உட்கொள்ளும் அசைவ உணவு எது என்பது குறித்த வியக்க வைக்கும் புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.
இந்தியர்களின் உணவுப் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அவர்களின் அசைவ உணவு பழக்கத்தில் மீன் மற்றும் கடல்சார் உணவுகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்தியாகளின் அசைவ உணவு பழக்கத்தில் மீன் மற்றும் கடல் உணவுகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இந்தத் தகவல், ‘அவர் வேர்ல்ட் இன் டேட்டா' எனும் இணையதளத்தில் வெளியான 2022-23-ம் ஆண்டு புள்ளி விபரங்கள் மூலம் தெரியவருகினறன.
இந்தத் தரவுகளின்படி, இந்தியர்களின் அசைவ உணவில் மீன் மற்றும் கடல் உணவுகள் 52 சதவீதமாக உள்ளது. இது உலகளாவிய சராசரியான 31 சதவீதத்தை விட மிகவும் அதிகம். இந்த புள்ளி விவரங்கள், பல்வேறு நாடுகளுக்கிடையேயான உணவு விருப்பத் தேர்வுகளில் உள்ள வேறுபாடுகளையும் காட்டுகின்றன.
பிரேசிலில் கோழி இறைச்சி அதிகம் உட்கொள்ளப்படுகிறது. கோழி இறைச்சியுடன், மாட்டிறைச்சி மற்றும் எருமை இறைச்சியும் அந்நாட்டில் அதிகம் விரும்பப்படுகின்றன. அர்ஜென்டினாவில் மாட்டிறைச்சி மற்றும் எருமை இறைச்சி பரவலாக உண்ணப்படுகின்றன. ஜெர்மனி மற்றும் சீனாவில், பன்றி இறைச்சி உணவில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தப் புள்ளி விவரங்களின்படி, இந்தியர்களின் அசைவ உணவில் பாதிக்கும் மேலாக மீன் மற்றும் கடல் உணவுகள் பங்குவகிக்கின்றன. கோழி இறைச்சி 21 சதவீதமும், மாட்டிறைச்சி மற்றும் எருமை இறைச்சி 14 சதவீதமும், ஆட்டு இறைச்சி 11 சதவீதமும் இடம் பெற்றுள்ளன.
அமெரிக்காவில், பன்றி இறைச்சியும் கோழி இறைச்சியும் உணவில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஜப்பானில் மீன் மற்றும் கடல் உணவுகளின் பங்கு மிக அதிகம்; இது அந்நாட்டின் தனித்துவமான உணவுப் பழக்கத்தைக் காட்டுகிறது.
இந்தியாவோடு ஒப்பிடுகையில், ஜெர்மனி மற்றும் சீனாவில் பன்றி இறைச்சி மிகவும் பிரபலமாக உள்ளது. அங்கு மொத்த இறைச்சி மற்றும் கடல் உணவு நுகர்வில் பன்றி இறைச்சி கணிசமான பங்கைக் கொண்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள், நாடுகளுக்கு இடையே அசைவ உணவுகளில் உள்ள வேறுபாட்டையும், இறைச்சி மற்றும் கடல் உணவுகளின் நுகர்வு விகிதத்தை மட்டுமே நமக்குக் காட்டுகின்றன.
இந்தியாவின் அசைவ உணவுக் கலாச்சாரத்தில் மற்ற இறைச்சி வகைகளை விட மீன் மற்றும் கடல் உணவுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு குறிப்பிடத்தக்க தனித்துவமாகும்.