

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த காலக் கெடுவின்படி, மேற்கு வங்கத்தின் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) செயல்முறைக்குப் பிந்தைய முதல்கட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
அதேநேரம் அந்த பட்டியலை தேர்தல் ஆணையம் இதுவரை இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலின்படி மாநிலத்தில் இருந்த 7.08 கோடி வாக்காளர்களில், இதுவரை சுமார் 7 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 60 லட்சத்து 60,475 பேரின் பெயர்கள் ஆய்வில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரைவுப் பட்டியலுக்குப் பிறகு, தர்க்க ரீதியான முரண்பாடு என குறிக்கப்பட்ட இந்த 60 லட்சம் பேரின் பெயர்கள் இன்னும் சரிபார்ப்புக்காக நிலுவையில் உள்ளன. கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில், 58 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எஸ்ஐஆர் செயல் முறை முடிவடையும்போது, நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போதுள்ளதை விட அதிகமாக இருக்கும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பாரக்பூர் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. பார்த்தா போமிக் நேற்று கூறும்போது, ‘‘முழுமையான பட்டியலை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை. நைஹாத்தியில் [வடக்கு 24-பர்கானாஸ்] கிடைத்த தகவலின்படி, உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 7 மருத்துவர்கள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் சிலரின் பெயர்கள் விடுபட்டிருக்கிறது. இன்னும் பலர் இருப்பார்கள்’’ என்றார்.
தேர்தல் ஆணையம் விளக்கம்: இறப்பு, இடமாற்றம், இரட்டைப் பதிவுகள் மற்றும் முகவரி கண்டறிய முடியாத காரணங்களால் மட்டுமே பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், முறையான ஆவண சரிபார்ப்புக்குப் பிறகே புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.