மொபைல் டவர் முன்பு குவிந்துள்ள கொண்டபள்ளி கிராம மக்கள்.
புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் பஸ்தார் பகுதியில் உள்ளது கொண்டபள்ளி கிராமம். தெலங்கானா - சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லைப் பகுதியில் இந்த கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. ஆதிவாசிகள் அதிகம் பேர் இங்கு வசிக்கின்றனர். இங்கு மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் இருந்தது. அவர்களின் ரகசிய கூடாரம் கிராமம் முழுவதும் இருந்தது. அவர்களை மீறி கிராம மக்களால் ஒன்றும் செய்ய முடியாது.
அவர்களைப் பற்றி போலீஸுக்கு தகவல் தெரிவிப்பவர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். இதனால் கிராமத்தில் மின்சாரம், மொபைல் போன்ற எந்த வசதிகளும் இல்லாமல் மக்கள் தனித்து விடப்பட்டனர்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் நாடு முழுவதும் மாவோயிஸ்டுகளை ஒழிப்போம். சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, ஏராளமான மாவோயிஸ்டுகள் சரணடைந்து வருகின்றனர். அவர்கள் தொழில் செய்ய நிதியுதவி அளிக்கப்படுகிறது. பலர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். மேலும், மேம்பாட்டு பணிகள் ஒவ்வொரு கிராமமாக செய்யப்பட்டு வருகின்றன. கூடுதல் படைகள் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டன. சாலை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பகுதியில் உள்ள கொண்டபள்ளி கிராமத்தில், பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மொபைல் போன் நெட்வொர்க் வசதி ஏற்படுத்தப்பட்டது. தங்கள் மொபைல் போன்களில் சிக்னல் கிடைத்ததும் ஆதிவாசி கிராம மக்கள், புதிதாக அமைக்கப்பட்ட மொபைல் போன் டவர் அருகில் கூடினர். அங்கு மேள தாளத்துடன் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கிராமத்தில் வசிக்கும் முதியவர்கள், அந்த மொபைல் டவரை ஆசையாக தொட்டுப் பார்த்தனர். பெண்கள் பலர் டவர் அருகில் விளக்கேற்றி அதை வழிபட்டனர். இந்த நடவடிக்கை சுதந்திரமாக வாழ முடியும் என்ற நம்பிக்கையை கிராம மக்களுக்கு அளித்துள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெளியுலகத்துடன் தொடர்பு கொள்வதற்கான வழி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என்று கிராம மக்கள் உணர்ச்சி வசப்பட்டு கூறுகின்றனர். எங்களுக்குப் புது வாழ்க்கை கிடைத்துள்ளது என்று கிராமத்தினர் தெரிவிக்கின்றனர். இதற்காக சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய்க்கு கிராம மக்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.