ஸ்ரீநகர் மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட அதிகாரி சபா ஷால்
ஸ்ரீநகர் மத்திய சிறை கண்காணிப்பாளராக முதன்முறையாக பெண் அதிகாரி நியமனம்
ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் மத்திய சிறையின் கண்காணிப்பாளராக முதன்முறையாக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை மாலை வெளியான அரசு உத்தரவின்படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள வெவ்வேறு சிறைகளுக்கு 4 அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் ஸ்ரீநகர் மத்திய சிறைக்கான பொறுப்பு 2012ம் ஆண்டு பேட்ச் அதிகாரி சபா ஷாலுக்கு வழங்கப்பட்டது. சபா ஷால் இந்த நியமனத்துக்கு முன், ஜம்மு காஷ்மீர் சிறைகள் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் பணியாளர் அதிகாரியாக பணியாற்றினார்.
ஜம்மு காஷ்மீர் சிறைகள் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். ஸ்ரீநகரில் வசதியான மக்கள் வசிக்கும் பிர் பாக் பகுதியில் வசிக்கும் சபா ஷால், சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2012ல் காஷ்மீர் அரசுப் பணிகள் தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
இவரை அறிந்த அதிகாரிகள் கூறுகையில், “சபா ஷால் தனது பணியில் நன்கு தேர்ச்சி பெற்றவர். நிறைந்த அனுபவம் கொண்டவர். இருப்பினும் இது அவருக்கு ஒரு சவாலான பணியாகவே இருக்கும். என்றாலும் சிறைத் துறையை அவர் நன்கு அறிந்தவர் என்பதால் திறம்பட பணியாற்றுவார் என நம்புகிறோம்" என்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பழமையான சிறைகளில் ஸ்ரீநகர் சிறையும் ஒன்றாகும். அரசியல் கைதிகள் உட்பட 900-க்கும் மேற்பட்டோர் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். காவல் துறை மட்டுமின்றி மத்திய தொழிலக பாதுகாப்பு படையும் இதற்கு பாதுகாப்பு அளிக்கிறது.
கடந்த காலங்களில் வெளி நாட்டு தீவிரவாதிகள், பிரிவினைவாத தலைவர்கள் பலர் இந்த சிறையில் இருந்தனர். பிறகு இவர்களில் பெரும்பாலானோர் கோட் பல்வால், ஜம்மு உள்ளிட்ட நகரங்களில் உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
