அரசுப் பள்ளியில் அத்துமீறி நுழைந்ததாக சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே மீது எஃப்ஐஆர் பதிவு

அரசுப் பள்ளியில் அத்துமீறி நுழைந்ததாக சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே மீது எஃப்ஐஆர் பதிவு
Updated on
1 min read

லாத்தூர்: மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குள் அனுமதியின்றி நுழைந்து, பணி செய்ய விடாமல் தடுத்து ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

லாத்தூரில் உள்ள ஜில்லா பரிஷத் உருது தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் சையத் ஷம்ஷாத் பானோ கைராதலி அளித்த புகாரின் அடிப்படையில், அவ்ஸா காவல் நிலையத்தில் இந்த எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டும் வகையில் சிஜேபி இயக்கம் நடத்தி வரும் 'ஸ்கூல் தீக் கரோ' (பள்ளிகளைச் சீரமைப்போம்) என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திப்கே பல்வேறு அரசுப் பள்ளிகளுக்குச் சென்று வருகிறார்.

அவ்ஸா அருகே உள்ள ஜவாலியில் இயங்கும் ஜில்லா பரிஷத் உருதுப் பள்ளிக்குத் திப்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனுமதியின்றி நுழைந்து, மாணவர்களிடையே அமர்ந்து கேள்விகளைக் கேட்டு, பள்ளியின் கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆசிரியர்களைப் பணி இடைநீக்கம் செய்வதாக மிரட்டியதுடன், வேறு பள்ளி மாணவர்களை வரவழைத்து வகுப்பறையில் உட்கார வைத்திருப்பதாகப் பள்ளிக்கு எதிராக அவதூறு பரப்பியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், அத்துமீறி நுழைதல், குற்றவியல் மிரட்டல் மற்றும் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளியில் அத்துமீறி நுழைந்ததாக சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே மீது எஃப்ஐஆர் பதிவு
வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி: அமெரிக்க பொருட்கள் மீது செப். 8 முதல் வரி விதிக்க கனடா முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in