

கொல்கத்தா: கடந்த 2011-ம் ஆண்டு முதல் பவானிபூர் முதல்வர் மம்தாவின் தொகுதியாக உள்ளது. இங்கு வரும் 29-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் மம்தா எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் உருவாவதற்கு முன்பு, கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலத்திலும் இது காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. பல்வேறு சமூக மக்கள் வாழும் இந்தத் தொகுதியில் மம்தா நடைப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இதே தொகுதியில்தான் மம்தா பானர்ஜியின் வீடும் உள்ளது.
இங்குள்ள பள்ளி, அசுதோஷ் கல்லூரியில்தான் மம்தா படித்து மாணவர் பருவத்தில் அரசியலில் ஈடுபட்டு பல போராட்டங்களை நடத்தியுள்ளார். அதனால் இத் தொகுதி மக்கள் மம்தாவை உள்ளூர் வாசியாக பார்க்கின்றனர் என அசுதோஷ் கல்லூரி அருகே உணவகத்தில் பணியாற்றும் 80 வயது அமோல் என்பவர் கூறுகிறார்.
இங்கு மம்தாவை எதிர்த்து போட்டியிடும் சுவேந்து அதிகாரி நந்திகிராமைச் சேர்ந்தவர். இதனால் அவர் இங்கு வெளிநபராக கருதப்படுகிறார். கடந்த 2021-ல் நந்திகிராமில் மம்தாவை தோற்கடித்த சுவேந்து அதிகாரி, இப்போது மம்தாவின் சொந்த மண்ணில் அவரை வீழ்த்தினால், அது பாஜக.வுக்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.
ஆனால், இங்கு, அவர் மம்தாவை எளிதாக வீழத்த முடியாது என சிலர் கூறுகின்றனர். ஆனால், வங்காள மொழி பேசாத மக்கள் இங்கு அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் மம்தாவின் கொள்கைகளுக்கு எதிராக தற்போது கருத்து தெரிவிக்கின்றனர். மேற்குவங்கத்தில் நிலவும் ஊழல், சட்டம் ஒழுங்கு, பொருளாதார மந்த நிலை, ஊடுருவல், கொல்கத்தா சந்தையில் முஸ்லிம்களின் ஆதிக்கம் ஆகியவை குறித்து மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பக்ரி சந்தையில் தொழில் செய்த குஜராத்திகள் பலர் பெங்களூர், அகமதாபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு சென்று விட்டனர். இங்கு சிலர் மம்தாவுக்கு ஆதரவாக பேசுகின்றனர். சிலர் மாற்றம் வேண்டும் என்கின்றனர்.