

பாட்டில் பாபா
புது டெல்லி: உத்தரப் பிரதேசம் கான்பூரில் போலி துறவியாக வாழ்ந்த பாட்டில் பாபா கைதாகி உள்ளார். இவர் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதாகக் கூறி ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் பதிவாகி உள்ளது.
உ.பி.யின் கான்பூர் ஊரக மாவட்டத்தின் தேவ்ரத் கிராமத்தில் இருப்பவர் பாட்டில் பாபா என்றழைக்கப்படும் ஹரி ஓம் யாதவ். இங்கு சுமார் 10 ஏக்கர் அளவிலான நிலத்தில் ஆசிரமம் அமைத்திருக்கும் இவருக்கு பக்தர்கள் அதிகம்.
இவர் தன் ஆசிரமத்தில், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் நோய்களை தீர்ப்பதாக கூறி சந்திப்பு நடத்துவது வழக்கம். இங்கு அருகிலுள்ள அவுரையாவைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த ஜூன் 15-இல் புற்றுநோய் சிகிச்சைக்கு வந்துள்ளார்.
அப்போது, அப்பெண்ணின் மீது ஒரு தீய நிழல் படிந்திருப்பதாகவும், அதை நீக்க மற்றொரு வேள்வி நடத்தப்பட வேண்டும் என்றும் அவரிடம் கூறி உள்ளார். இதற்காக அப்பெண்ணை பாட்டில் பாபா ஓர் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதனுள், தீய சக்தியை அகற்றும் சடங்கின் சாக்கில் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக அப்பெண் பாபா மீது குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூச்சலிட்டபோது, பாட்டில் பாபா, அப்பெண்ணை கொன்றுவிடுவதாகவும் மிரட்டி உள்ளார்.
இந்தப் புகாரை ஏற்ற கான்பூர் ஊரக காவல் துறையினர், பாட்டில் பாபாவை அவரது உதவியாளர் தீபக் என்பவருடன் சேர்த்து கைது செய்துள்ளது. தீய சக்தியை அகற்றும் சடங்கு செய்வதாகக் கூறித் தன்னிடம் 40,000 ரூபாய் வாங்கப்பட்டதாகவும் அப்பெண் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த சர்ச்சை குறித்துப் பாட்டில் பாபா பேசுகையில், ’என் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இது அனைத்தும் ஒரு சதி. நான் ஓர் உண்மையான துறவியாக வாழ்ந்து வருகிறேன். யாராலும் என்னை அழிக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.